ஒழுக்கம், கண்ணியம் இருக்கணும்: ஆபாச யூடியூபருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
ஒழுக்கம், கண்ணியம் இருக்கணும்: ஆபாச யூடியூபருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
ADDED : மார் 03, 2025 08:28 PM

புதுடில்லி: யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவை கடுமையாகக் கண்டித்த சுப்ரீம் கோர்ட், மீண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய அனுமதி அளித்தது.
இந்தியாஸ் காட் லேட்டன்ட்' என்ற நிகழ்ச்சியில் அல்லாபாடியாவின் ஆபாசமான கருத்துக்களைத் தொடர்ந்து, பிப்ரவரி 18 அன்று சுப்ரீம் கோர்ட், அவர் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப கூடாது என்று தடை விதித்தது, அதே நேரத்தில் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் அசாம் காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பல எப்.ஐ.ஆர். களின் அடிப்படையில் கைது செய்யப்படுவதிலிருந்து இடைக்கால பாதுகாப்பை வழங்கியது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று ரன்வீர் அல்லாபாடியாவுக்கு மிகப்பெரிய நிவாரணமாக, வீடியோ ஒளிபரப்பு செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.அறநெறி மற்றும் கண்ணியத்திற்கு உட்பட்டு தனது நிகழ்ச்சிகளை நடத்த அவருக்கு சுதந்திரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியது.
நீதிபதிகள் கூறியதாவது:பல ஊழியர்கள் இருப்பதாக அவர் கூறுகிறார், எனவே வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ள குடும்பங்கள் உள்ளன. ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் பேணுவதற்கு உட்பட்டு, அவர் ஒரு நிகழ்ச்சியை நடத்த விரும்பினால், அவரால் முடியும்,
பேச்சு சுதந்திரத்திற்கு வரம்புகள் உள்ளன. ஆபாசமான மொழியைப் பயன்படுத்துவது நகைச்சுவை அல்ல. அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான உத்தரவாதத்தை நாடு வழங்குகிறது, ஆனால் சில கடமைகளும் உள்ளன.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதே நேரம், ஆபாசமாக பேசியதற்கு அல்லாபாடியாவுக்கு கடுமையான கண்டனமும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆன்லைன் ஊடக உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின் தொகுப்பை வரைவு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரையும் வழங்கியுள்ளது.