'வழக்குகளை அவசரமாக விசாரிக்க வாய்மொழி கோரிக்கை கூடாது'
'வழக்குகளை அவசரமாக விசாரிக்க வாய்மொழி கோரிக்கை கூடாது'
ADDED : நவ 13, 2024 03:59 AM

புதுடில்லி: “வழக்குகளை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாய்மொழி வாயிலாக கோரக் கூடாது. இ - மெயில் அல்லது எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்,” என, உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், வழக்கறிஞர்கள் தங்களுடைய வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பர். அதன் தன்மைக்கு ஏற்ப, தலைமை நீதிபதி முடிவு எடுப்பார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கன்னா, நேற்று கூறியதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைவரும் சமம். எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு தரப்பட வேண்டும். இதுவே நீதித்துறையின் முக்கியமான கடமை.
மக்களை மையமாக கொண்டே, நீதிமன்ற நடவடிக்கைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். வழக்குகள் அதிகம் தேங்குவதை தவிர்ப்பது, குறைந்த செலவில் விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்.
அந்த வகையில், தங்களுடைய வழக்குகளை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று, வழக்கறிஞர்கள் வாய்மொழி வாயிலாக இனி கோரக் கூடாது. இ - மெயில் அல்லது கடிதம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டியதன் காரணத்தையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

