இணையப் பாதுகாப்பில் தீவிர கவனம் இருக்கணும்; புதிய கவர்னருக்கு சக்தி காந்த தாஸ் அறிவுரை
இணையப் பாதுகாப்பில் தீவிர கவனம் இருக்கணும்; புதிய கவர்னருக்கு சக்தி காந்த தாஸ் அறிவுரை
ADDED : டிச 10, 2024 01:38 PM

புதுடில்லி: மாறி வரும் உலகில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 முக்கிய அறிவுரைகளை, புதிய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவுரை வழங்கி உள்ளார்.
தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதையடுத்து, மத்திய அரசு புதிய கவர்னரை நியமித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக, மத்திய வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று (டிச.,10) சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. அவர் தன்னால் முடிந்ததை செய்வார் என்று நான் நம்புகிறேன். கோவிட் காலத்திலும் சக ஊழியர்கள் ஒவ்வொருவரும் கடினமான காலங்களில் தங்களால் இயன்றதை செய்தனர். ரிசர்வ் வங்கி கவர்னராக பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நான் பொருளாதாரத்தில் சிறப்பான இடத்தை அடைய முயற்சி செய்தேன்.
நல்ல உறவு
வளர்ச்சியை கருத்தில் கொண்டு பணவீக்கத்தை கட்டுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று நான் கூறினேன். எனது 6 ஆண்டுகால கவர்னர் பதவியில் நிதி அமைச்சகத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான உறவு சிறப்பாக இருந்தது. ரிசர்வ் வங்கி ஒரு நல்ல நிறுவனம். ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் அதிக அறிவு மற்றும் தொழில்முறை திறன் கொண்டவர்கள். யு.பி.ஐ., பணம் செலுத்தும் முறை, உலகளாவிய முன்னோடியாக உள்ளது. இவ்வாறு சக்தி காந்த தாஸ் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள, சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு சக்திகாந்த தாஸ் 6 முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அதன் விபரம் வருமாறு:
* வளர்ச்சிக்கும், பணவீக்கத்துக்கு இடையிலான சமன்பாட்டை நிலைநிறுத்த வேண்டும்.
* மாறி வரும் உலகில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
* இணைய வழியில் சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர் சவால்களை மிகவும் தீவிரத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.
* புதிய தொழில்நுட்பங்களின் நலன்களை முழுவதுமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
* மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி உருவாக்கத்தில் முன்னோடியாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
* அனைவருக்குமான நிதி சேவை திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்