ஆபரேஷன் சிந்தூர் பெயரை சொந்தமாக்க 'போட்டா போட்டி'!
ஆபரேஷன் சிந்தூர் பெயரை சொந்தமாக்க 'போட்டா போட்டி'!
UPDATED : மே 08, 2025 04:11 PM
ADDED : மே 08, 2025 03:37 PM

புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயருக்கு வர்த்தக முத்திரை பதிவு (டிரேட் மார்க்) கோரி, சில நிறுவனங்கள் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி நள்ளிரவு இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் அந்நாடு ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை மூலம் இந்தியா தாக்கியது.
இதனால் உலகம் முழுவதும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயர் பிரபலம் அடைந்துள்ளது. இதை வர்த்தக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள தனியார் நிறுவனங்களும், தனி நபர்களும் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட 4 பேர் 'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்கு வர்த்தக முத்திரை பதிவு (டிரேட் மார்க்) கோரி, விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனர்.
ரிலையன்ஸ் தவிர மற்ற மூவரும் தனி நபர்கள். சினிமா, தொலைக்காட்சி தொடர் அல்லது அது தொடர்பான வர்த்தக செயல்பாடுகளுக்காக இந்த பெயரை இவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வர்த்தக முத்திரை என்ன?
வர்த்தக முத்திரை என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பு அல்லது சேவையை வேறுபடுத்திக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல், சின்னம் ஆகும். இது நிறுவனத்திற்கு தனியுரிமையை வழங்குகிறது.
விண்ணப்பித்து விட்டால் மட்டும் வர்த்தக முத்திரை கிடைத்துவிடாது. அதற்கான பதிவாளர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உரிய முடிவு எடுப்பார். ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதையும் பரிசீலனை செய்வார் என்கின்றனர் நிபுணர்கள்.
பெயர் பின்னணி...!
'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரை ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா சூட்டியது. அதில், ஆங்கிலத்தில் இடம் பெற்ற O என்ற எழுத்துக்கு பதிலாக, ஒரு கிண்ணத்தில் குங்குமம் வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பின், குங்குமம் கொட்டிக் கிடக்கிறது. இது, 25 பெண்களின் வாழ்க்கைத் துணையை பறித்த பாக்., பயங்கரவாதிகளின் இரக்கமற்ற தன்மையைக் குறிக்கிறது. இது தான் ஆபரேஷன் சிந்தூர் பெயருக்கு மவுசு கூடியதற்கு காரணமாக அமைந்துள்ளது.