மேஜை மீது ஏறி ரவுசு... ஒடிசா சட்டசபையில் கடும் அமளி
மேஜை மீது ஏறி ரவுசு... ஒடிசா சட்டசபையில் கடும் அமளி
ADDED : ஆக 23, 2024 12:19 PM

புவனேஸ்வர்: ஒடிசா சட்டசபையில் கள்ளச்சாராய விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமளி
ஒடிசா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜுலை 31ம் தேதி முடிவடைந்தது , பின்னர், ஆக., 20 முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் கள்ளச்சாராய விவகாரம் மற்றும் மாணவர்களுக்கான தேர்தலை ரத்து செய்தது உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி, காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அட்டகாசம்
இந்நிலையில், வழக்கம் போல சட்டசபை கூடியதும் பிஜு ஜனதா தளம் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். ஏ.எஸ்.ஓ.,வை கவர்னரின் மகன் தாக்கிய சம்பவம் மற்றும் கள்ளச்சாராய விவகாரத்தை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட முயன்றனர். மேஜை மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட முயன்ற அவர்களை, பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். இதனால், ஒடிசா சட்டசபை போர்க்களம் போல காட்சியளித்தது.
மரணம்
தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைப் போல, கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சிக்கிடி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து, 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

