ம.ஜ.த.,வில் ஒரு எம்.எல்.ஏ., கூட இருக்க மாட்டார்கள்: யோகேஸ்வர்
ம.ஜ.த.,வில் ஒரு எம்.எல்.ஏ., கூட இருக்க மாட்டார்கள்: யோகேஸ்வர்
ADDED : நவ 26, 2024 02:21 AM

பெங்களூரு: ''நான் மனசு வைத்தால், ம.ஜ.த.,வில் ஒரு எம்.எல்.ஏ., கூட இருக்க மாட்டார்கள். 10 முதல் 15 எம்.எல்.ஏ.,க்களை காங்கிரசுக்கு அழைத்து வருவது, பெரிய விஷயமே அல்ல,'' என சென்னப்பட்டணாவில் வெற்றி பெற்ற காங்கிரசின் யோகேஸ்வர் சவால் விடுத்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் மேலிடம் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தால், ம.ஜ.த.,வின் 10 முதல் 15 எம்.எல்.ஏ.,க்களை அழைத்து வருவது, பெரிய விஷயம் இல்லை. நான், மனம் வைத்தால், ம.ஜ.த.,வில் ஒரு எம்.எல்.ஏ., கூட இருக்க மாட்டார்கள்.
ம.ஜ.த.,வில் எதிர்காலமே இல்லை என, எம்.எல்.ஏ.,க்கள் வருத்தம் அடைந்துள்ளனர். அவர்களுக்கும் அரசியலில் செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ம.ஜ.த.,வில் குமாரசாமி, தேவகவுடா பெயரில் வெற்றி பெற முடியாது.
நான் அழைக்கா விட்டாலும், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசுக்கு வர விரும்பினால், எங்கள் மேலிடம் சம்மதித்தால் கட்சியில் சேர்த்து கொள்வோம்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, அரசியல் ஓய்வு அறிவிக்க இது சரியான தருணம். தேவகவுடா தலைமையை மக்கள் ஏற்கவில்லை. மாநில கட்சி பெயரில் அவர்கள் குடும்ப அரசியல் செய்கின்றனர். அரசியலில் இருந்து தேவகவுடா, ஓய்வு பெறுவது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.