நீங்கள் பாக்கெட்டில் வைத்திருப்பதை நாங்கள் மனதில் வைத்துள்ளோம்: காங்கிரசுக்கு ராஜ்நாத் பதில்
நீங்கள் பாக்கெட்டில் வைத்திருப்பதை நாங்கள் மனதில் வைத்துள்ளோம்: காங்கிரசுக்கு ராஜ்நாத் பதில்
ADDED : டிச 13, 2024 03:32 PM

புதுடில்லி: '' காங்கிரசார் அரசியல் சாசனத்தை பாக்கெட்டில் வைத்துள்ளனர். ஆனால், நாங்கள் அதனை மனதில் வைத்து அதன்படி வாழ்ந்து வருகிறோம்,'' என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949 நவ.,26ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை முன்னிட்டு லோக்சபாவில் நடந்த விவாதத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: அரசியல் சாசன பணியை கைப்பற்ற குறிப்பிட்ட கட்சி பல முறை முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான பணிகள் மக்களிடம் மறைக்கப்பட்டு உள்ளன.
எதிர்க்கட்சியினர் அரசியலமைப்பு புத்தகத்தை பாக்கெட்டில் வைத்துள்ளனர். நாங்கள் மனதில் வைத்துள்ளோம். காங்கிரசை போல், அரசியலமைப்பை ஒரு கருவியாக பயன்படுத்தி நாங்கள் அரசியல் லாபம் பெறவில்லை. அரசியலமைப்பின் படி நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக தீட்டப்படும் சதிகளை நாங்கள் விழிப்புடனும், உண்மையான ராணுவ வீரர்கள் போலவும் எதிர்கொண்டோம். அதனை காக்க பல துயரங்களை சகித்துக் கொண்டோம்.
1973 ல் சர்வாதிகார அரசின் அதிகாரத்தை, அரசியலமைப்பின்படி குறைக்க முயன்றதற்காக நீதிபதிகள் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. 1973 ல், அரசியலமைப்பு விதிகளை மீறி காங்கிரஸ் அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மூத்த நீதிபதிகளாக இருந்த ஜே/எம்/ ஷெலாத், கே/எஸ்/ ஹெக்டே, ஏ/என்/ குரோவர் ஆகியோருக்கு அடுத்தபடியாக இருந்தவரை தலைமை நீதிபதியாக நியமித்தது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
மேலும் ராஜ்நாத் சிங் பேசும்போது, அவசர நிலைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கியதற்காக, முன்னாள் நீதிபதி எச்.ஆர். கன்னாவிற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவியை வழங்க காங்கிரஸ் அரசு மறுத்தது என்றும் குறிப்பிட்டார்.