அவங்க முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை; உத்தவ், சரத்பவார் கட்சிகள் மீது காங்., குற்றச்சாட்டு
அவங்க முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை; உத்தவ், சரத்பவார் கட்சிகள் மீது காங்., குற்றச்சாட்டு
ADDED : நவ 24, 2024 04:16 PM

பெங்களூரு: மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில்,மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள உத்தவ் மற்றும் சரத்பவார் ஆகிய இரு கட்சியினரும் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை என கர்நாடக உள்துறை அமைச்சரும், மஹாராஷ்டிரா தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவருமான பரமேஸ்வர் குற்றம் சாட்டி உள்ளார்.
மஹாராஷ்டிராவில் நேற்று சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 233 ல் மஹாயுதி கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ஆனால் மஹா விகாஸ் அகாடி கூட்டணியோ வெறும் 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இந்நிலையில் காங்கிரஸின் மஹா., தேர்தல் பொறுப்பாளரான கர்நாடகா அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில்,
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு, பல தொகுதிகளில், மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் அணியின் முழுமையான ஒத்துழைப்பு தேவைப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. அதேபோல,உத்தவ் அணிக்கு காங்கிரஸ் தரப்பில் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை.
தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணியை சேர்ந்தவர்களும் அதே வகையில் செயல்பட்டனர். இப்படி முழு ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில், கூட்டணிக்குள் சில குறைகள் இருந்தன. இதனால் உத்தவ் அணி 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணிக்கு 10 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி கிடைத்தது.
105 தொகுதிகளில் போட்டியிட்ட, காங்கிரஸ் விதர்பாவில் நிறைய தொகுதிகளில் வென்றிருக்கலாம். 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு வெறும் 8 தொகுதிகளில்தான் வெற்றி கிடைத்தது. 70 தொகுதிகளுக்குமேல் எதிர்பார்த்தோம் ஆனால் அதை பெறமுடியவில்லை.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.