சொல்கிறார்கள் –––––––––––– ‘மண் வள பாதுகாவலர்’ விருது பெற்ற ஒரே இந்தியர்! -----------––––––––––––
சொல்கிறார்கள் –––––––––––– ‘மண் வள பாதுகாவலர்’ விருது பெற்ற ஒரே இந்தியர்! -----------––––––––––––
ADDED : ஆக 24, 2026 12:00 PM
பல பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்டும், கோவை மாவட்டம், வேட்டைக்காரன்புதுார் கிராமத்தைச் சேர்ந்த, 59 வயதாகும் வள்ளுவன்:
மானாவாரி நிலத்தில் தான், என் பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர். எனக்கு சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் அதிகம். பட்டப்படிப்பு முடித்து, சிவில் இன்ஜினியராக வேலை செய்ய ஆம்பித்த பின், விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
கடந்த 2006ம் ஆண்டு, 7.5 ஏக்கர் நிலம் வாங்கி, தென்னை விவசாயத்தில் இறங்கினேன். ஒரு தேங்காய்க்கு, 3 ரூபாய் தான் விலை கிடைத்தது; அது கட்டுப்படியாகவில்லை. இதனால், மிகுந்த மன உளைச்சல் அடைந்து, விவசாயத்தை எப்படி லாபகரமாக மாற்றலாம் என்ற தேடலில் இறங்கினேன்.
இது குறித்து, வேளாண் துறை அதிகாரிகளை கலந்து ஆலோசித்தபோது, அவர்கள் என் நிலத்தில் உள்ள மண்ணை பரிசோதித்து பார்த்து, ‘மண்ணில் கரிமச்சத்து 0.52 சதவீதம் தான் இருக்கிறது. இயற்கை உரங்கள் மட்டும் பயன்படுத்தி, பல அடுக்குகளாக பலவித பயிர்களை சாகுபடி செய்தால், நிறைவான லாபம் கிடைக்கும்’ என தெரிவித்தனர்.
அவர்கள் வழிகாட்டுதலுடன், தென்னை மரங்களுக்கு நடுவே ஏழு வகை வாழைக்கன்றுகளும், வாழைகளைச் சுற்றி பப்பாளி, ஜாதிக்காய், தேக்கு, பாக்கு உள்ளிட்ட மரங்களையும், பாக்கு மரங்களுக்கு நடுவில் மிளகு கொடிகளை ஊன்றி, கொடிகளை மரங்களில் ஏற்றி விட்டோம். மற்ற மரங்களுக்கு இடையில் காய்கறிகள் பயிர் செய்து வருகிறோம். 7.5 ஏக்கரில், 14 வகை பயிர்கள் சாகுபடி செய்கிறோம்.
எந்தவித ரசாயன நச்சுத்தன்மையும் இல்லாமல், மண் ஆரோக்கியமாக உள்ளதால், இதிலிருந்து கிடைக்கும் உணவும் ஆரோக்கியமாக இருக்கிறது. இயற்கை முறையில் உற்பத்தி செய்வதால், என் விளைபொருட்களுக்கு நல்ல விலையும் கிடைத்து வருகிறது.
கடந்த 2024ல், தமிழ்நாடு அங்கக வேளாண்மை துறை அதிகாரிகள், என் தோட்டத்தை ஆய்வு செய்தபோது, அங்கக கரிமத்தின் அளவு 3.36 சதவீதம் இருந்ததால், மிகவும் ஆச்சரியப்பட்டனர். அந்த ஆண்டுக்கான, ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின், ‘மண் ஆரோக்கிய பாதுகாவலர்கள்’ என்ற உலகளாவிய விவசாய போட்டிக்கு, என்னை பரிந்துரை செய்தனர்.
சிறந்த மண் வளத்துக்கான மூன்றாவது பரிசு எனக்கு கிடைத்தது. இந்த விருது பெற்ற ஒரே இந்தியர் நான் தான்.
மொத்தம் 7.5 ஏக்கரில், செலவுகள் போக, ஆண்டுக்கு, 22.50 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. பலவித பயிர்களை சாகுபடி செய்வதால், சில விளைபொருட்களுக்கு விலை சரிவு ஏற்படக்கூடிய சமயங்களில், மற்ற பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதன் வாயிலாக, பொருளாதார இழப்பை ஈடுகட்ட முடிகிறது.
தொடர்புக்கு: 94422 59597.
***
