ADDED : செப் 06, 2026 11:10 AM
––––––––––––––––
‘நெருக்கடிகள், சவால்கள்
இருந்தாலும்
விவசாயத்தை
கைவிட்டதில்லை!’
–––––––––––––––
தனி ஆளாக விவசாயத்தில் ஈடுபட்டு, ஆண்டுக்கு 1.20 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டநாகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 70 வயதாகும் சவடம்மாள்:
எங்கள் குடும்பத்திற்கு, 19 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆற்று பாசனத்திற்கு வாய்ப்பில்லாததால் கிணறு, ஆழ்துளை கிணற்றை நம்பி தான் இருந்தேன். நெல், நிலக்கடலை, சோளம் என சாகுபடி செய்து வந்தேன். நிலத்தடி நீர் குறைய ஆரம்பித்ததால், 10 ஆண்டுகளாக 6 ஏக்கரில் மட்டுமே விவசாயம் செய்து வருகிறேன். மீதி நிலத்தை ஆடுகளுக்கு மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகிறேன்.
என் கணவர் இறந்து, 35 ஆண்டுகள் ஆகின்றன. தனி ஒருத்தியாக எவ்வளவோ நெருக்கடிகளையும், கடும் சவால்களையும் சந்தித்துள்ளேன். ஆனால், ஒரு நாள் கூட விவசாயத்தை கைவிட வேண்டும் என்று நினைத்ததில்லை. உடல்நிலை சரியில்லை என்றால் கூட, தட்டுத் தடுமாறி பண்ணைக்கு வந்து விடுவேன்.
கணவர் இறந்த பின், பொருளாதார ரீதியாக சிரமப்படாமல் இருப்பதற்கு காரணம், விவசாயமும், ஆடு, மாடு வளர்ப்பும் தான். மகன் நன்கு படித்து சிங்கப்பூரில் பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவர் படிப்பதற்கு கை கொடுத்தது விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான்.
தண்ணீர் பற்றாக்குறையால், நான்கு ஆண்டுகளுக்கு முன், வேலுார் மாவட்டம், வெள்ளோடு பகுதியில் இருந்து, 300 எலுமிச்சை கன்றுகள் வாங்கி வந்து, 3 ஏக்கரில் நடவு செய்தேன். ஏனெனில், இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது; பராமரிப்பும் குறைவு.
வாரம் ஒருமுறை தண்ணீர்; 20 நாட்களுக்கு ஒருமுறை களை எடுப்பு; இரு மாதங்களுக்கு ஒருமுறை எரு, அவ்வளவு தான் எலுமிச்சைக்கான பராமரிப்பு.
நான் மூன்று மாடுகளும், 50 செம்மறி ஆடுகளும் வளர்த்து வருகிறேன். என் அனுபவத்தில் மாட்டு எருவை விட, ஆட்டு எருவில் அதிக பலன் கிடைக்கிறது. எலுமிச்சையில், செழிப்பான விளைச்சல் கிடைக்க இதுவும் முக்கிய காரணம்.
நான் சாகுபடி செய்துள்ளது, வீரியமான பாலாஜி ரக எலுமிச்சை கன்றுகள். நடவு செய்ததில் இருந்து, மூன்றரை ஆண்டுகளில் காய்ப்புக்கு வர ஆரம்பித்தன. கடந்தாண்டு, விற்பனைக்கு அனுப்பும் அளவுக்கு நன்கு காய்த்தன.
மொத்தம் 3 ஏக்கரில், 300 எலுமிச்சை மரங்களில் இருந்து, வாரம் ஒருமுறை 2,500 பழங்கள் வீதம் அறுவடை செய்தேன். மாதம் ஒன்றுக்கு, 10,000 பழங்கள் வீதம், ஆண்டுக்கு 1.20 லட்சம் பழங்கள் கிடைத்தன.
வேடசந்துார் சந்தையில் ஒரு பழம், 1.50 ரூபாய் வீதம் விற்பனை செய்ததன் வாயிலாக, 1.80 லட்சம் ரூபாய் வருமானமும், எல்லா செலவுகளும் போக, 1.20 லட்சம் ரூபாய் லாபமும் கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக மகசூல் அதிகரிக்கும்; அப்போது, கூடுதலாக லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
***
