ADDED : செப் 19, 2026 04:21 AM
சொல்கிறார்கள்/ 20/09/26 ஞாயிறு 2வது இதழ்
-----––––––
ஆனந்த விகடன், ஆக., 26, 2026, பக்: 69
––––––––––––––––––––
‘அரசு பணி கிடைத்தால்
நம் தேசிய கொடியை
உயர பறக்க விடுவேன்!’
––––––––––––––––––––
கைகள் இல்லாத சூழலில், கால்களால் விளையாடி தங்க பதக்கங்களை குவிக்கும் கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்த, மாற்றுத்திறனாளியான, 26 வயது இளைஞர் பிளசிங் சஜு:
என் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். அந்த காலத்தில் வீட்டிலேயே பிரசவம் நடக்கும். என்ன தவறு நடந்ததோ தெரியவில்லை. இரு கைகளும் இல்லாமல் பிறந்து விட்டேன். அதற்காக, வீட்டிற்குள் முடங்கி கிடக்க முடியாதே. கால்களாலேயே எழுத பழகி கொண்டேன்.
பொதுத்தேர்வுகள் எழுத, மற்ற மாணவர்களை விட எனக்கு கூடுதல் நேரம் ஒதுக்கினர்; ஆனால், நான் மற்ற மாணவர்களை விட சீக்கிரமாகவே எழுதி முடித்து விட்டேன். 10ம் வகுப்பில் 386, பிளஸ் 2வில் 1,200க்கு 1,056 மதிப்பெண்கள் பெற்று, பி.காம்., முடித்தேன்.
நண்பர்களுடன் வாலிபால் விளையாடுவேன். அவர்கள் கைகளால் பந்தை அடிக்க, நான் கால்களால் விளையாடுவேன். கால்களால் பந்தை உருட்டி விளையாடுவதை, சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தேன். அந்த காணொளிகளை கால்களாலேயே, ‘எடிட்’ செய்வேன். கால்களாலேயே மொபைல் போன், கம்ப்யூட்டர் இயக்குவேன். கால்களில் கரண்டி பிடித்து சாப்பிடுவேன்.
என் காணொளிகளை பார்த்த, சென்னையைச் சேர்ந்த, ‘டேக்வாண்டோ’ எனும் தற்காப்பு கலை ஆசிரியர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு, ‘உங்களுக்கு டேக்வாண்டோ எளிதாக வரும். அதற்கான பயிற்சி எடுங்கள்’ என வழிகாட்டினர். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி எடுத்து வருகிறேன்.
வீட்டிலேயே தோலால் செய்து மணல் நிரப்பிய, ‘பஞ்சிங் பேக்’ அமைத்து, தினமும் நான்கு மணி நேரம் தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன். 2023ல் மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் நடந்த தேசிய போட்டியில் பங்கேற்று, முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்றேன்.
அடுத்து, 2025ல் மலேஷியாவில் நடந்த 10வது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியிலும் தங்கம் வென்றேன். கடந்த மே மாதம் மங்கோலியாவில் நடந்த 11வது ஆசிய போட்டியில், 63 கிலோ எடை பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி, தங்கம் வென்றேன். அடுத்தடுத்து நிறைய சர்வதேச போட்டிகள் வருகின்றன. போதிய நிதி உதவி இல்லாததால், நிறைய போட்டிகளை தவற விட்டு விட்டேன்.
வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் உலக, ‘சாம்பியன்ஷிப்’ போட்டிக்கு தயாராகி வருகிறேன். எனக்கு விளையாட்டு சிறப்பு ஒதுக்கீட்டில் அரசு பணி கிடைத்தால், போட்டிகளுக்கு செல்ல உதவியாக இருக்கும். நம் தேசிய கொடியை உலக அளவில் உயர பறக்க வைப்பேன். என்னை நினைத்து பெற்றோர் மட்டுமின்றி, இந்தியாவே பெருமைப்படும் நாள் வரும்!
* தொடர்புக்கு: 93629 38673.
***
