ADDED : நவ 23, 2024 06:17 AM
மாண்டியா : போலீஸ் மீதான பயத்தால் மர்ம நபர் ஒருவர், தான் திருடிய தங்க நகைகளை, வீட்டு திண்ணையில் வைத்து ஓட்டம் பிடித்தார்.
மாண்டியா மாவட்டம், ராகிமுத்தனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் சித்தேகவுடா. இவரது மனைவி ராதா. இம்மாதம் 19ம் தேதி, கோவிலில் பூஜை செய்வதற்காக, சித்தேகவுடா குடும்பத்தினர் அன்று காலை, வீட்டை பூட்டி கொண்டு சென்றிருந்தனர்.
வீட்டை நோட்டம் விட்ட மர்ம நபர், பூட்டை உடைத்து உள்ளே புகுந்தார். வீடு முழுதும் தேடி, பீரோவில் இருந்த மூன்று தங்க கம்மல்கள், ஒரு செயின் உட்பட 75 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடினார்.
இரவு சித்தேகவுடா குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, திருட்டு நடந்திருப்பது தெரிந்தது. மாண்டியா ஊரக போலீஸ் நிலையத்தில், சித்தேகவுடா புகார் செய்தார். போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதற்கிடையில் திருட்டுப் போன நகைகள், நேற்று காலையில் இவரது வீட்டு திண்ணையில் இருந்தன. இதை பார்த்து, அவரது குடும்பத்தினர் ஆச்சரியத்துடன், நிம்மதி அடைந்தனர்.
போலீசார் தீவிரமாக விசாரிப்பதால், சிக்குவோம் என்ற பீதியில், நகைகளை திருடன் திண்ணையில் வீசிச் சென்றிருக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.