ADDED : டிச 15, 2024 10:56 PM
மங்களூரு: தட்சிணகன்னடா படுபிதரேவில் வசிப்பவர் ஜேம்ஸ் டயான். இவர் தன் மாருதி காரை, 1997, செப்டம்பர் 29ம் தேதி இரவு, வீட்டு முன் நிறுத்தியிருந்தார். காலையில் பார்த்த போது, காரை காணவில்லை. இது தொடர்பாக, படுபிதரே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
விசாரணை நடத்திய போலீசார், ஷிவமொக்கா, சாகராவில் வசிக்கும் ஹுச்சப்பாவை கைது செய்தனர்.
விசாரணையில் கார் திருட்டில் பசவராஜ், துர்காநாத்துக்கும் தொடர்புள்ளது தெரிந்தது. போலீசார், நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். பசவராஜ், ஹுச்சப்பா ஆஜராகாமல் தலைமறைவாகினர். அவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
போலீசாரும் தொடர்ந்து அவர்களை தேடினர். துர்காநாத் சிக்கினார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பசவராஜை தேடினர். 27 ஆண்டுகளுக்கு பின், சாகராவில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்ய போலீசார், நேற்று முன் தினம் சாகராவுக்கு சென்றனர். ஆனால் 14 ஆண்டுக்கு முன், அவர் இறந்துவிட்டது தெரிந்தது.
ஷிவமொக்கா மாநகராட்சியிடம், மரண சான்றிதழ் பெற்று, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.