திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி தங்கவயலில் 26ல் நடக்கிறது
திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி தங்கவயலில் 26ல் நடக்கிறது
ADDED : நவ 23, 2024 06:16 AM
தங்கவயல் : ஆங்கிலப் பள்ளிகளின் மாணவர்கள், திருக்குறளை தமிழில் ஒப்புவிக்கும் போட்டி, தங்கவயலில் வரும் 26ம் தேதி நடக்கிறது.
நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை அமைப்பின் 10ம் ஆண்டு விழா ராபர்ட்சன்பேட்டை மொய்து மஹால் மண்டபத்தில் இம்மாதம் 26ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து விழா ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் கூறியதாவது:
நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் 10ம் ஆண்டு விழா, வரும் 26ம் தேதி ராபர்ட்சன்பேட்டை மொய்து மஹாலில் நடக்கிறது. காலையில் துவங்கும் விழாவில், சம்பத் ராக்கியநாதன் வரவேற்கிறார்.
பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அதிகாரி ராம் பிரசாத் மனோகர், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
புகாரி மொய்து, தமிழ்ச்சங்கத் தலைவர் கலையரசன், கர்நாடக தமிழர் கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி.குமார், பேராசிரியர்கள் கிருஷ்ணகுமார், ராமு, தங்கவயல் நகராட்சித் தலைவர் இந்திரா காந்தி, துணைத் தலைவர் ஜெர்மன் ஜூலியட், புலவர் கார்த்தியாயினி, முத்துமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
திருக்குறள் ஒப்புவித்தல், தமிழ் மரபு நடன போட்டிகளில் தங்கவயலில் உள்ள 25 பள்ளிகள் பங்கேற்கின்றன.
இவற்றில் 23 ஆங்கிலப் பள்ளிகளின் மாணவர்கள், தமிழில் திருக்குறளை பொழிப்புரையுடன் ஒப்புவிக்கின்றனர்.
இவர்களுடன் இரண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பங்கேற்கின்றனர். காலையில் துவங்கும் விழா, மாலை வரை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.