சரணாலயத்தில் பிறந்த ஓநாய் குட்டிகள்; வன விலங்குகள் பாதுகாப்பு முயற்சிக்கு வெற்றி!
சரணாலயத்தில் பிறந்த ஓநாய் குட்டிகள்; வன விலங்குகள் பாதுகாப்பு முயற்சிக்கு வெற்றி!
ADDED : பிப் 06, 2025 01:00 PM

கோப்பல்: கர்நாடகா சரணாலயத்தில் 8 ஓநாய் குட்டிகள் பிறந்த நிகழ்வு, வனவிலங்குகளின் பாதுகாப்பில் மிகப்பெரிய வெற்றி என்று வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் ஓநாய் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெண் ஓநாய் ஒன்று 8 குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. அழிந்து வரும் உயரினங்களில் ஒன்றான இந்திய ஓநாய்களின் இந்தப் பிறப்பை வனவிலங்கு ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து கர்நாடகா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே கூறுகையில், 'இந்த சரணாலயத்தில் 30 முதல் 40 ஓநாய்கள் உள்ளன. அதில், இந்திய சாம்பல் ஓநாய் ஒன்று 8 குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. பொதுவாக, குட்டிகள் 50 சதவீதம் மட்டுமே பிழைக்கின்றன. குட்டிகளை பாதுகாப்பாக வளர்க்கத் தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்,' எனக் கூறினார்.
இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த வனவிலங்கு ஆர்வலரும், தமிழக சுகாதாரத்துறையின் கூடுதல் தலைமை செயலாளருமான சுப்ரியா சாகு, வனவிலங்கு பாதுகாப்பில் இது மிகப்பெரிய வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'புலி, சிங்கம் போன்ற பெரிய விலங்குகள் அதிக கவனம் பெறும். ஆனால், இந்திய சாம்பல் ஓநாய்கள் உள்பட அனைத்து வனவிலங்குகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். சுற்றுச்சூழல் அமைப்பை சமநிலையில் வைக்க ஓநாய்கள் முக்கிய பங்காற்றுகின்றன. வாழ்விடங்களை இழத்தல், மனித - விலங்குகள் மோதல் உள்ளிட்டவற்றால், அவை அழிந்து வருகின்றன. இதுபோன்ற சரணாலயங்களின் மூலம் ஓநாய்கள் பாதுகாப்பாக வளர்கின்றன. எனவே, அழிந்து வரும் விலங்குகளை பாதுகாக்க இதுபோன்ற சரணாலயங்கள் தேவைப்படுகின்றன,' எனக் கூறினார்.