வெள்ளம் பாதித்த ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை இதுதான்; மத்திய அமைச்சர் விளக்கம்
வெள்ளம் பாதித்த ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை இதுதான்; மத்திய அமைச்சர் விளக்கம்
ADDED : ஆக 28, 2025 11:17 AM

ஸ்ரீநகர்: கனமழை மற்றும் வெள்ளத்தால் ஜம்மு காஷ்மீர் தத்தளித்து வரும் நிலையில், அங்கு நிலவி வரும் தற்போதைய சூழல் குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்களில், 41 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். ரியாசி, அனந்த்நாக், கதுவா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த பெருமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. கனமழையால், தாழ்வான பகுதிகளிலும், வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்தது. இதனால், யூனியன் பிரதேசம் முழுதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ஜம்மு காஷ்மீரில் நேற்று நிலவி வந்த மோசமான வானிலை சற்று மேம்பட்டுள்ளன. ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மஞ்சள் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. ஜம்மு, உதம்பூர் மற்றும் டோடா பகுதிகளில் மட்டும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக.,29ம் தேதிக்குப்பின் ஜம்மு காஷ்மீர் வானிலை மேலும் மாற்றமடையும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.