மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் தூக்கி அடிக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்; சொல்கிறார் கே.டி.ஆர்.,
மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் தூக்கி அடிக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்; சொல்கிறார் கே.டி.ஆர்.,
UPDATED : நவ 24, 2024 08:11 AM
ADDED : நவ 24, 2024 08:09 AM

அமராவதி: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தற்கான காரணம் என்ன என்பது குறித்து பாரத் ராஷ்ட்ரா சமிதி கட்சியின் கே.டி. ராமராவ் விளக்கம் அளித்துள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளை வென்று மாபெரும் வெற்றி பெற்றது. பா.ஜ., 132 தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 தொகுதிகளிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதன்மூலம், மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி வெறும் 49 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
பா.ஜ., கூட்டணியின் வரலாறு காணாத வகையிலான வெற்றியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் ஏற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொய்யான வாக்குறுதிகளே காங்கிரஸ் கட்சியின் மஹாராஷ்டிரா தேர்தல் தோல்விக்கு காரணம் என்று தெலுங்கானாவைச் சேர்ந்த பாரத் ராஷ்ட்ரா சமிதி கட்சியின் கே.டி. ராமராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: தெலுங்கானா மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு, அதனை நிறைவேற்றாமல் துரோகம்செய்த காங்கிரஸின் செயலை மஹாராஷ்டிரா மக்கள் கவனித்துள்ளனர். பொய் விளம்பரங்களுக்கு மக்களின் வரிப்பணம் ரூ.300 கோடியை வீணடித்துள்ளனர். தெலுங்கானாவில் 1.6 கோடி பெண்களுக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை தருவதாகக் கூறிவிட்டு, அதனை வழங்கவில்லை. இந்த சூழலில், மஹாராஷ்டிராவில் பெண்களுக்கு ரூ.3,000 தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
ஜார்க்கண்டிலும் கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி செய்ய முடியாது. மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலில் தேசிய கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மாநில கட்சிகள் மீது தான் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது, எனக் கூறினார்.

