இது உங்கள் இடம்: ஜனநாயகம் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது!
இது உங்கள் இடம்: ஜனநாயகம் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது!
ADDED : பிப் 29, 2024 12:25 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
எஸ்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற சவால், நம் முன்னே உள்ளது. 100 சதவீதம் ஓட்டுச்சீட்டை பயன்படுத்தி தேர்தலை நடத்த வேண்டும். இ.வி.எம்., இயந்திரத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதே, 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் முடிவு.
'இந்த சவாலை ஏற்க மறுத்தால், விடுதலை சிறுத்தைகள் தேர்தலை புறக்கணிக்கக் கூட தயாராக இருக்கிறது' என, ஓட்டுப்பதிவில், 100 சதவீத ஒப்புகை சீட்டை பயன்படுத்தி முடிவுகளை அறிவிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் அறைகூவல் விடுத்துள்ளார்.
'காலந்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை' என்று எம்.ஜி.ஆர்., அரை நுாற்றாண்டுக்கு முன்பே பாடி சென்றிருக்கிறார். ஒருவன், 10 வயதில் அணிந்து கொண்டிருந்த அதே ஆடைகளை, 50 வயதிலும் அணிந்து கொள்ள ஆசைப்பட்டால் முடியுமா?
ஆனால், திருமாவளவனோ பிடிவாதமாக, 10 வயதில் அணிந்த ஆடைகளைத் தான் அணிந்து கொண்டு உலா வருவோம் என்பதில், அதாவது ஓட்டுச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
நாடு முழுதும் இ.வி.எம்., இயந்திரத்தின் வாயிலாக ஓட்டுப்பதிவு நிகழும் போது, தமிழகத்தில், அதுவும் வி.சி.,க்கள் போட்டியிடும் ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டும் ஓட்டுச்சீட்டை பயன்படுத்தி தேர்தல் நடத்த முடியுமா?
இ.வி.எம்., இயந்திரத்தின் வாயிலாக நடத்தப்படும் தேர்தலில் போட்டியிட விருப்பமிருந்தால், போட்டியிடுங்கள். விருப்பம் இல்லாவிட்டால், தேர்தலை புறக்கணித்து விடுங்கள். அதற்காக, நடைமுறைகளை உங்கள் இஷ்டத்துக்கு மாற்ற முடியாது.
நம் நாட்டில் ஜனநாயகம் மிகுந்த பாதுகாப்புடன் தான் உள்ளது. அதற்கு, திருமாவளவன் ஒன்றும் சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை!
