கன்வார் யாத்ரீகர்களை வரவேற்க 17 இடங்களில் தோரண வாயில்
கன்வார் யாத்ரீகர்களை வரவேற்க 17 இடங்களில் தோரண வாயில்
ADDED : ஜூலை 16, 2025 10:15 PM

புதுடில்லி,:“டில்லிக்குள் நுழையும் கன்வார் யாத்ரீகர்களை வரவேற்க மாநகர் முழுதும், 17 இடங்களில் வரவேற்பு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என, அமைச்சர் கபில் மிஸ்ரா கூறினார்.
கிழக்கு டில்லி அப்சரா எல்லையில், கன்வார் யாத்ரீகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களை நேற்று ஆய்வு செய்த கபில் மிஸ்ரா, நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த ஆண்டு, கன்வார் யாத்ரீகர்களை வரவேற்க மாநகர் முழுதும், 374 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டில் ஆம் ஆத்மி அரசால், 170 முகாம்கள் தான் அமைக்கப்பட்டு இருந்தன.
மேலும், முகாம்களில் யாத்ரீகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு செய்துள்ள ஏற்பாடுகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. அதேபோல, 17 இடங்களில், ஜோதிர்லிங்கங்கள் மற்றும் சிவபெருமான் பெயர்களில் வரவேற்பு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து, தண்ணீர், உணவு, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளுக்கான ஏற்பாடுகள் உட்பட யாத்ரீகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் டில்லி அரசு செய்துள்ளது.
சிவபக்தர்களை வரவேற்க அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பங்கேற்கின்றனர். வரும், 20ம் தேதி டில்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில் அமைச்சர்கள் கன்வார் யாத்ரீகர்களை வரவேற்கின்றனர்.
சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள், டில்லி மாநகரப் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 11ம் தேதி துவங்கிய கன்வார் யாத்திரை வரும், 23ம் தேதி நிறைவடைகிறது.

