சஞ்சு சாம்சனின் வாழ்க்கையை சீரழித்ததே அந்த 4 பேரு தான் ; தந்தை வேதனை
சஞ்சு சாம்சனின் வாழ்க்கையை சீரழித்ததே அந்த 4 பேரு தான் ; தந்தை வேதனை
ADDED : நவ 14, 2024 01:10 PM

திருவனந்தபுரம்: தனது மகனின் வாழ்க்கையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் தோனி, கோலி மற்றும் ரோகித் ஷர்மா தான் காரணம் என்று சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், அணியில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். தற்போது, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் சதம் அடித்த சாம்சன், அடுத்தடுத்த 2 போட்டிகளில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். டி20 கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னணி வீரர்களான கோலி, ரோகித் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால், இனி சஞ்சு சாம்சன் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை சீரழித்ததே முன்னாள் கேப்டன்களான தோனி, கோலி, ரோகித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான், என்று சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மலையாள மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: முன்னாள் கேப்டன்களான தோனி, கோலி, ரோகித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் என் மகனுக்கு போதிய வாய்ப்பை வழங்கவில்லை. இதனால், என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியமான 10 ஆண்டுகள் சீரழிந்து விட்டது. பல வேதனைகள், அவமானங்களை கடந்து என் மகன் தற்போது வலிமையாக எழுந்து நிற்கிறான், எனக் கூறினார்.
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்தது குறித்து விமர்சித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் விமர்சனத்திற்கும், விஸ்வநாத் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: என் மகனின் ஆட்டம் குறித்து ஸ்ரீகாந்த்திடம் இருந்து வந்த கமென்ட் என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 'வங்கதேசத்திற்கு எதிராக மட்டுமே சஞ்சு சாம்சன் சதம் அடிப்பார்', என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிராக ஸ்ரீகாந்த் வெறும் 26 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால், என் மகன் சஞ்சு சாம்சன் சதம் அடித்துள்ளார். சச்சின், ராகுல் டிராவிட் போல அவனும் சிறந்த வீரன், குறைந்தபட்சம் அதையாவது மதிக்க வேண்டும், என வேதனையுடன் கூறியுள்ளார்.

