முறைகேடில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது டில்லி முதல்வர் ரேகா குப்தா திட்டவட்டம்
முறைகேடில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது டில்லி முதல்வர் ரேகா குப்தா திட்டவட்டம்
ADDED : ஜூலை 17, 2025 10:11 PM
புதுடில்லி:டில்லியில், முந்தைய ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில், 'ஜெய் பீம் இலவச பயிற்சி திட்டத்தில்' முறைகேடு நடந்ததாக கூறி, அது குறித்து விசாரணை நடத்த, துணை நிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, ''இந்த ஊழலில் ஈடுபட்ட எவரும் தப்பிக்க முடியாது.
''ஆம் ஆத்மி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஊழல் மையங்களை அடியோடு அழிப்போம்,'' என, முதல்வர் ரேகா குப்தா உறுதியாக தெரிவித்துள்ளார்.
டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி காலத்தில், 2018ல், 'ஜெய் பீம் முக்யமந்திரி பிரதிபா விகாஷ் யோஜனா' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், 'நீட், சிவில் சர்வீஸ்' உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தனியார் பயிற்சி மையங்களில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.
டில்லியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கொரோனா காலத்தில் இந்த திட்டத்தில் மிகப் பெரிய ஊழல் அரங்கேறியதாக, தற்போதைய டில்லி கல்வி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஆஷிஷ் சூட், சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
'இந்த திட்டத்தின் மொத்த பட்ஜெட்டே, 15 கோடி ரூபாய் தான். ஆனால், 145 கோடி ரூபாய்க்கு போலி பில்கள் தயாரிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, 2021 - 22ல் தனியார் பயிற்சி மையங்கள் சார்பில், போதிய ஆவணங்கள் இல்லாமல், 145 கோடி ரூபாய்க்கு பில்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதை ஆய்வுக்கு உட்படுத்தாமல், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
'இந்த பயிற்சி மையங்களில், 13,000 மாணவர்கள் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 3,000 மாணவர்கள் மட்டுமே பயிற்சி பெற்றதற்கான ஆவணங்கள் உள்ளன. இதில், முந்தைய ஆம் ஆத்மி அரசு மிகப் பெரிய ஊழல் செய்துள்ளது' என, ஆஷிஷ் சூட் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு, டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.
இது குறித்து டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:
ஏழை மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டத்தில், முந்தைய ஆட்சியாளர்கள் மிகப் பெரிய ஊழலை அரங்கேற்றியுள்ளனர். இந்த முறைகேடில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தும் விசாரணையில் அனைத்து உண்மையும் வெளியில் வரும். ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து ஊழல் மையங்களும் அடியோது ஒழிக்கப்படும். பொதுமக்களின் வரிப்பணத்தை, ஆம் ஆத்மி கட்சியினர் முறைகேடாக பயன்படுத்தி ஊழல் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.