டில்லி தாக்குதல் நெட்வொர்க்கில் ஈடுபட்டவர்கள்... டாக்டர்கள்! பெரிய பதவிகளில் அமர்ந்து சதித்திட்டம் தீட்டுகின்றனர்
டில்லி தாக்குதல் நெட்வொர்க்கில் ஈடுபட்டவர்கள்... டாக்டர்கள்! பெரிய பதவிகளில் அமர்ந்து சதித்திட்டம் தீட்டுகின்றனர்
ADDED : நவ 12, 2025 02:37 AM

புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதல் நெட்வொர்க்கில் ஈடுபட்டவர்கள் அனைவரும் டாக்டர்களே என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரின் சந்தேக பார்வை, டாக்டர் போன்ற பெரிய பதவிகளில் இருப்பவர்கள் மீது விழாது என்பதால், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்களை மூளைச்சலவை செய்திருப்பதும் அம்பலமாகி உள்ளது.
இதில், பயங்கரவாத பெண்கள் பிரிவுக்கும் டாக்டர் ஒருவரே தலைவராக செயல்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் விதமாக, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் அனைவரும் நன்கு படித்த டாக்டர்கள் என தெரியவந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்ட விவகாரத்தில், ஆதில் என்ற டாக்டர் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் பதுங்கி இருந்தவரை கைது செய்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், அவரை மீண்டும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து, 2,550 கிலோ வெடிபொருட்கள், ஏ.கே., - 56, ஏ.கே., - 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையின் மருத்துவக் கல்லுாரி விரிவுரையாளர் முஸாமிலுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. உடனடியாக அங்கு விரைந்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், அவரையும் கைது செய்தனர்.
மேலும், அவர் தங்கி இருந்த வாடகை வீட்டில் இருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படும், 350 கிலோ, 'அமோனியம் நைட்ரேட்' வெடிபொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதக் குவியல்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த ஆயுதங்களை கடத்துவதற்கு கார் கொடுத்து உதவிய அதே பல்கலையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சையத்தும் கைது செய்யப்பட்டார்.
இதில் தொடர்புடைய நான்காவது டாக்டரான உமர், கைது நடவடிக்கைகளால் தலைமறைவான நிலையில், வெடிபொருட்கள் நிரப்பிய காரை டில்லி செங்கோட்டைக்கு ஓட்டிச்சென்று வெடிக்க செய்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல் நடத்தியவரும், அதற்காக சதித்திட்டம் தீட்டி வெடிபொருட்களுடன் கைதானவர்களும் டாக்டர்கள் என்பதால், போலீசாரே அதிர்ந்து போயினர்.
உயிரைக் காப்பாற்றும் பணியை செய்யும் டாக்டர்கள், உயிரை பறிக்கும் பயங்கரவாதிகளாக மாறியது திடுக்கிட வைத்துள்ளது. டாக்டர்கள் போன்ற பெரிய படிப்பு படித்தவர்கள் பெரும்பாலும் போலீசாரின் சந்தேக பார்வையில் விழ மாட்டார்கள்.
இதனால், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்களை மூளைச்சலவை செய்து, தங்கள் காரியத்தை நிறைவேற்ற ஜெய்ஷ் - இ - முகமது திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கேற்றபடி பெண் டாக்டரான ஷாஹீன், பெண் பயங்கரவாத பிரிவை உருவாக்க தலைவராக நியமிக்கப்பட்ட தகவலும் வெளியாகி உள்ளது.
'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலின் போது, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் நெருங்கிய உறவினர்கள், 10 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் மசூத் அசாரின் சகோதரி சாடியா அசாரின் கணவரும் உயிரிழந்தார்.
இதனால், சாடியா அசார் தலைமையில் இந்தியாவில் பெண்கள் பயங்கரவாத அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டு, அதற்கு தலைவராக, பெண் டாக்டர் ஷாஹீன் நியமிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்காக, ஜம்மு- காஷ்மீருக்கு ஷாஹீன் பலமுறை சென்று வந்துள்ளார்.
எனவே, இதுவரை அவர் எங்கெல்லாம் சென்றார் என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு பெண் டாக்டரான ஷாஹீன் திட்டம் தீட்டியது மட்டுமின்றி, அதற்கான நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். தனக்கு தெரிந்த டாக்டர்கள் நெட்வொர்க் மூலம், 40 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது.
போலீசாருக்கு தெரியாதபடி சங்கேத குறிப்புகளுடன், டாக்டர் ஷாஹீன், டாக்டர் முஸாமில் மற்றும் டாக்டர் உமர் மூவரும் தொடர்பில் இருந்துள்ளனர். மூவரும் சேர்ந்து கல்வி மற்றும் மருத்துவம் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சட்டவிரோதமாக நிதி சேகரித்துள்ளனர். இதனால், பாதுகாப்பு அதிகாரிகளின் ரேடார் கண்களில் இருந்து இவர்கள் தப்பியதாக தெரிகிறது.
பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருவதால், பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலைக்கும் இவர்களுக்குமான தொடர்பு குறித்தும், விசாரணை முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க துவங்கியுள்ளனர்.

