ADDED : ஏப் 23, 2025 11:07 PM
குருகிராம்:துவாரகா விரைவுச் சாலையில், பைக்குகளில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடில்லி - துவாரகா விரைவுச் சாலையில் கடந்த 20ம் தேதி காரில் சென்ற நான்கு பேருக்கும் பைக்கில் சென்ற சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காரில் வந்த நான்கு பேரும் கிரிக்கெட் மட்டை, பேஸ் பால் மட்டை ஆகியவற்றால் பைக்கில் வந்தவர்களை சரமாரியாகத் தாக்கினர். மேலும், பைக்குகளையும் உடைத்து சேதப்படுத்தினர்
பலத்த காயம் அடைந்த ஹர்திக் சர்மா, சிகிச்சைக்குப் பின், போலீசில் கொடுத்த புகாரில், “சாலை விதிமுறையை மீறி காரை ஓட்டி வந்து பைக் மீது இடித்தனர். அதைக் கேட்டதற்கு சரமாரியாகத் தாக்கினர். காரில் இருந்த நான்கு பேரும் மது போதையில் இருந்ததனர். என் பைக்கில் ஏற்பட்ட சேதத்தை சீர்படுத்த ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதற்கான இழப்பீட்டுத் தொகையை வாங்கித் தர வேண்டும்,”என, கூறியிருந்தார். இந்தத் தாக்குதலில் கவுரவ் மற்றும் அபினவ் ஆகியோரும் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்த குருகிராம் போலீசார், கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

