வேலைக்கு வெளிநாடு செல்வோர் உஷார்; ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் குமுறல்!
வேலைக்கு வெளிநாடு செல்வோர் உஷார்; ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் குமுறல்!
ADDED : செப் 14, 2024 04:37 PM

மாஸ்கோ: பிரதமர் மோடி தலையீட்டின் பேரில் ரஷ்யா ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் நாடு திரும்பினர். அங்கு அவர்கள் பட்ட வேதனையையும், துயரத்தையும் கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ரஷ்யாவில் பெரிய நிறுவனத்தில் வேலை, லட்சக்கணக்கில் சம்பளம் என இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களை ஏமாற்றி ரஷ்யாவிற்கு அழைத்து செல்லும் மோசடிகாரர்கள் அவர்களை அந்நாட்டு ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்து விட்டனர். ஏமாந்த இளைஞர்கள் பலர், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். மீட்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தார். அப்போது, இந்திய இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ரஷ்ய அதிபர் புடின் உறுதி அளித்தார். அதன்படி, தெலுங்கானா, கர்நாடகாவை சேர்ந்த 4 பேர் , ரஷ்ய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாய்நாடு திரும்பினார்.
அடிமைகள்
அவர்களில், தெலுங்கானாவைச் சேர்ந்த சுபியான் என்ற இளைஞர் கூறியதாவது: ரஷ்யாவில் நாங்கள் அடிமைகளாக நடத்தப்பட்டோம். தினமும் காலை 6 மணிக்கு எழும் நாங்கள் தொடர்ச்சியாக 15 மணிநேரம் வேலை பார்ப்போம். இடையில் எந்த ஓய்வும் இருக்காது. குறைந்தளவு உணவே வழங்கப்பட்டது. எங்களது கைகளில் கொப்புளம் ஏற்பட்டது. முதகுவலியுடன் அவதிப்பட்டோம். நாங்கள் சோர்வுக்கான அறிகுறியை காட்டினால், எங்களை மீண்டும் கடினமான பணிக்கு தள்ள நிர்பந்திக்கப்பட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவை சேர்ந்த அப்துல் நயீம் என்பவர் கூறுகையில், எங்களது மொபைல் போன் பறித்து கொண்டதும், பல மாதங்கள் பயிற்சிஅளிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்படவில்லை என்றார்.
கர்நாடகாவின் கல்புர்கியை சேர்ந்த சயீத் ஹூசைனி கூறியதாவது: தினமும் காலை எழும்நாங்கள், இது தான் எங்களது கடைசி நாள் என நினைத்தோம். துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு சத்தத்திற்கு மத்தியில் அச்சத்துடன் எங்களது வாழ்க்கை நகர்ந்தது என்றார்.
தங்களை போல் 60 பேர் ரஷ்யாவில் சிக்கியதாகவும், அவர்களில் பலர் மீட்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

