காஸ் சிலிண்டர்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தவர்கள் கைது; 70 சிலிண்டர்கள் பறிமுதல்
காஸ் சிலிண்டர்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தவர்கள் கைது; 70 சிலிண்டர்கள் பறிமுதல்
ADDED : மார் 17, 2026 06:43 PM

புதுடில்லி: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகள் நடத்தி வரும் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையை பயன்படுத்தி, சமையல் காஸ் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்று வந்த கும்பலை சேர்ந்த, 28 வயது நபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தென் கிழக்கு டில்லி மாவட்டத்தில் உள்ள ஜாமியாநகர் பகுதியில், 62 சமையல் காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவற்றை அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்து இருந்த, ஷா நவாஸ், 28, என்பவரை கைது செய்தனர்.அவர் அளித்த தகவலில், சமையல் காஸ் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்க, அவருக்கு உதவிய முகேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது, உத்தர பிரதேசத்தின் மீரட் நகரிலிருந்து கடத்தி வரப்படும் காஸ் சிலிண்டர்களை, டில்லியின் புறநகர் பகுதிகளில் அதிக விலைக்கு விற்று, கொள்ளை லாபம் சம்பாதித்து வந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அந்த கும்பலிடம் இருந்து, 70க்கும் மேற்பட்ட சமையல் காஸ் சிலிண்டர்களை கைப்பற்றியுள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
இதுவரை, 600க்கும் மேற்பட்ட சமையல் காஸ் சிலிண்டர்களை இந்த கும்பலை சேர்ந்தவர்கள், கொள்ளை லாபத்தில் விற்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

