ஆயிரக்கணக்கில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்கள்
ஆயிரக்கணக்கில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்கள்
ADDED : ஆக 03, 2025 12:57 AM

புதுடில்லி: நாடு முழுதும், எம்.பி.பி.எஸ்., எனப்படும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் 39 சதவீதம் அதிகரித்துள்ளன. எனினும், ஆயிரக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லோக்சபாவில் மத்திய சுகாதார துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் கூறியதாவது:
நாடு முழுதும் கடந்த 2020 - 21ல் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான இடங்கள் 83,275 இருந்த நிலையில், கடந்த கல்வியாண்டில் 1,15,900 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இது, 39 சதவீதம் கூடுதலாகும். எனினும், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
ஒவ்வொரு கல்வியாண்டும் காலியிடங்களுக்கான எண்ணிக்கை குறைந்தாலும், முழுதும் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த 2021 - 22ம் கல்வியாண்டில், 2012 ஆக இருந்த காலியிடங்களின் எண்ணிக்கை, 2022 - 23ம் ஆண்டில் 4,146 ஆக அதிகரித்தது.
இது 2024 - 25ல் 2,849 ஆக உள்ளன.
இதற்கிடையே உத்தர பிரதேசம், தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்கள், எம்.பி.பி.எஸ்., இடங்களை நிரப்புவதில் முன்னணியில் உள்ளன.
தமிழகத்தில் 2020-21ல் 8,000 ஆக இருந்த இடங்கள் 12,000 ஆக உயர்ந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.