ADDED : நவ 07, 2024 02:16 AM

ஹூப்பள்ளி : பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல் விடுத்த நபரை ஹூப்பள்ளியில், மும்பை போலீசார் தேடுகின்றனர்.
ஹிந்தி திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். அவருக்கு அவ்வப்போது மிரட்டல் வருகிறது. அக்டோபர் 28ம் தேதி, 2 கோடி ரூபாய் கேட்டு, மிரட்டல் வந்தது. இது குறித்து விசாரணை நடத்திய மும்பை போலீசார், நொய்டாவில் 20 வயது இளைஞரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
இதற்கிடையில் மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. மும்பை போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையின், 'வாட்ஸாப்' எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர், மெசேஜ் அனுப்பினார். தன்னை நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என அறிமுகம் செய்து கொண்டார்.
அதன்பின், 'மானை வேட்டையாடி கொன்ற வழக்கில், சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது எங்களுக்கு 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சல்மான்கானை கொலை செய்வோம்' என மிரட்டல் விடுத்திருந்தார். சிறிது நேரத்துக்கு பின், மீண்டும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு குறுந்தகவல் அனுப்பிய அந்நபர், 'நான் தவறாக இந்த தகவலை அனுப்பினேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்' என கூறியிருந்தார்.
கொலை மிரட்டல் வந்துள்ளதால், சல்மான் கானுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 'வாட்ஸாப்'புக்கு மிரட்டல் வந்த எண்ணை வைத்து தேடிய போது, கர்நாடகாவின் ஹூப்பள்ளியில் இருந்து, மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இததையடுத்து, மும்பை போலீஸ் குழுவினர், ஹூப்பள்ளிக்கு வந்து மிரட்டல் விடுத்த நபரை தேடுகின்றனர்.