ADDED : நவ 14, 2025 12:22 AM
புதுடில்லி:ஏர் இந்தியாவின் டொராண்டோ - டில்லி விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
கனடாவின் டொராண்டோவில் இருந்து டில்லிக்கு நேற்று பிற்பகல் 3:40க்கு தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்று காலை காவல் துறைக்கு இந்த மிரட்டல் வந்தது.
இதையடுத்து விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. தனிக்குழு அமைக்கப்பட்டு, மிரட்டல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. டொராண்டோவில் இருந்து டில்லி வந்த விமானம், சிறிது தாமதமாக பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானமும் பயணியரும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பாதுகாப்பு கருதி, தனி இடத்தில் விமானம் நிறுத்தப்பட்டது. அதில் வெடிகுண்டு உள்ளிட்ட எந்த விதமான அபாயகரமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. திங்கட்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் அனைத்து விமானங்களுக்கும் கட்டாய சோதனைகள் மேற்கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

