நிர்மலா சீதாராமன், நட்டா மீதான மிரட்டல் வழக்கு தள்ளுபடி
நிர்மலா சீதாராமன், நட்டா மீதான மிரட்டல் வழக்கு தள்ளுபடி
ADDED : டிச 04, 2024 04:43 AM

பெங்களூரு: பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டி 8,000 கோடி ரூபாய்க்கு, தேர்தல் பத்திரம் வாங்க வைத்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா உள்ளிட்டோர் மீதான வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மஹாலட்சுமி லே - அவுட்டில் வசிப்பவர் ஆதர்ஷ் அய்யர், 50. பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆதர்ஷ் அய்யர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திரம் வாங்கி பா.ஜ.,வுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்று பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனர் ஆகியோரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமலாக்கத்துறை, கர்நாடக பா.ஜ., முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல், தற்போதைய தலைவர் விஜயேந்திரா மிரட்டி உள்ளனர்.
பணம் தராவிட்டால் அமலாக்கத்துறை வாயிலாக ரெய்டு நடத்துவோம் என்று கூறி, 8,000 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்துள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி கே.என்.சிவகுமார், திலக்நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். கடந்த செப்., 28ம் தேதி, திலக்நகர் போலீசார் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை, நட்டா, நளின்குமார் கட்டீல், விஜயேந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நளின்குமார் கட்டீல் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், “குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. தேர்தல் பத்திரம் வாங்கியதால் பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் அளித்திருந்தால், அது முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலையாக இருந்திருக்கும். ''புகார்தாரர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இல்லை. மிரட்டி பணம் பறித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதனால் இந்த வழக்கை மேற்கொண்டு தொடர அனுமதி முடியாது,” என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.