ADDED : அக் 23, 2024 02:42 AM
புதுடில்லி, உள்நாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு, மர்ம நபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
உள்நாட்டு விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா ஆகியவற்றிற்கு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 120 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அவை அனைத்தும் புரளி என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த மிரட்டல்களால், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், பயணியர் என அனைவரும் சிரமத்தை சந்திக்கின்றனர்; வெளிநாடு செல்ல இருந்த சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு செய்யப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி, விமான பாதுகாப்பு துறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா ஆகிய மூன்று நிறுவனங்களின் 50 விமானங்களுக்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
பெங்களூரு, கோழிக்கோடு, டில்லி நகரங்களிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு புறப்பட்ட இண்டிகோவின் மூன்று விமானங்கள் வெடிகுண்டு மிரட்டலால் கத்தாரின் தோஹா மற்றும் சவுதியின் ரியாத், மதினா ஆகிய நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக பயணியர் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
'வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருந்தாலும் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கான தண்டனை கடுமையாக்கப்படும்' என, விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார். அதையும் மீறி, விமானங்களுக்கு மிரட்டல் விடுப்பது தொடர்கிறது.