விமானங்களுக்கு மிரட்டல்: விதிகளை கடுமையாக்க முடிவு
விமானங்களுக்கு மிரட்டல்: விதிகளை கடுமையாக்க முடிவு
ADDED : அக் 18, 2024 03:56 AM

புதுடில்லி: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க, விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான வழக்குகளை கையாள வெளிநாடுகளில் பின்பற்றும் விதிமுறைகளை ஆய்வு செய்யவும் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மிரட்டல் விடுக்கும் நபர்களை விமான நிறுவனங்களின் 'நோ ப்ளை' பட்டியல் அதாவது விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் நபர்களின் பட்டியலில் சேர்ப்பது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
விதிகளில் மாற்றங்களைச் செய்வது தொடர்பாக கருத்துகள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அதிகாரிகள், போலி மிரட்டலை அடையாளம் காணும் விதமாக தொழில்நுட்ப வசதிகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
விமானங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு எச்சரித்திருந்த நிலையில், மேலும் இரண்டு தனியார் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.