ADDED : நவ 26, 2024 01:29 AM

நாகரபாவி : காரை வாடகைக்கு எடுத்து சென்ற மாணவர்களை மிரட்டி பணம் பறித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, நாகரபாவியை சேர்ந்தவர் வினோத், 30. இவர், தன் காரை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வருகிறார். கடந்த வாரம், பெங்களூரில் வசித்து வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐந்து மாணவர்கள், மடிகேரிக்கு சுற்றுலா செல்வதற்காக, வினோத்திடம் இருந்து காரை வாடகைக்கு எடுத்து சென்று உள்ளனர்.
சுற்றுலா முடிந்தவுடன், காரை ஒப்படைக்க வந்து உள்ளனர். அவர்களிடம், வினோத் நைசாக பேசி, நாகரபாவியில் உள்ள தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்று உள்ளார். இதற்கிடையில், தன் அலுவலகத்திற்கு, நண்பர்கள் நிதின், 28, ச ஷாங், 27, ஆகிய இருவரையும் வரவழைத்து உள்ளார்.
அலுவலகத்திற்கு வந்த மாணவர்களிடம், 'நீங்கள் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் காரை ஓட்டியுள்ளீர்கள். போக்குவரத்து விதிகளை மீறியுள்ளீர்கள். எனவே, 1.20 லட்சம் ரூபாய் அபராதம் தர வேண்டும்' என கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், விதிகளை மீறியதற்கான செலான்களை காண்பிக்குமாறு கூறியுள்ளனர். அவர்களால் முடியவில்லை. இதையடுத்து வினோத்தும், அவரது நண்பர்களும் மாணவர்களை கத்தியை காண்பித்து மிரட்டி உள்ளனர்.
மாணவர்களோ தங்களிடம் பணம் எதுவும் இல்லை என கூறியுள்ளனர். இதை ஏற்காத வினோத் கும்பல், அருகில் இருந்த கடையில் உள்ள, 'கியூஆர்' குறியீட்டில் 50,000 ரூபாய் செலுத்த வைத்துள்ளனர். மேலும், அவர்கள் வைத்திருந்த லேப் டாப்களை பறித்து கொண்டனர்.
சம்பவம் குறித்து சந்திரா லே - அவுட் போலீசில் மாணவர்கள் புகார் செய்தனர். மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து டி.சி.பி., கிரீஷ் கூறுகையில், ''மாணவர்களிடம் 1.20 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டுள்ளனர். அவர்கள் 50 ஆயிரம் ரூபாய் பணம் தந்துள்ளனர். மீதி பணத்தே கேட்கும் போது, சந்திரா லே அவுட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், இதற்கு முன்பு எதுவும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.

