டில்லியில் இளைஞரை கொலை செய்து யமுனை கரையில் புதைத்த மூவர் கைது
டில்லியில் இளைஞரை கொலை செய்து யமுனை கரையில் புதைத்த மூவர் கைது
ADDED : ஜூலை 17, 2025 11:08 PM
புதுடில்லி:டில்லியில் இளைஞரை கொலை செய்து, யமுனை ஆற்றங்கரையில் புதைத்த மூன்று சிறுவர்களை, மூன்று மாதங்களுக்கு பின், போலீசார் கைது செய்துள்ளனர்.
டில்லி போலீசார், நேற்று முன்தினம் இரவு வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த, 16 - 17 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்களை நிறுத்தினர். தப்பியோட முயன்ற அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்த மொபைல் போனை வாங்கி ஆய்வு செய்தனர். அந்த மொபைல் போன் வாங்கிய பில்லை காட்டும்படி கேட்டபோது, மூவரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்தனர். தொடர்ந்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
டில்லியைச் சேர்ந்த சோனு குமார், 18, என்பவர், கடந்த ஏப்ரலில் அலிபூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த மூன்று சிறுவர்களும், அவரை வழிமறித்து, அவரிடமிருந்து மொபைல் போனை திருட முயன்றனர்.
மொபைல் போனை சோனு குமார் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த சிறுவர்கள், அவரை கடுமையாக தாக்கினர். அவரது கழுத்தை நெறித்துக் கொலை செய்தனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, அவரது கண்களையும் பிடுங்கினர். இதன்பின், சோனு குமாரின் உடலை யமுனை ஆற்றங்கரையில் மணலுக்குள் புதைத்துவிட்டு தப்பினர்.
தற்போது வாகன சோதனையில் மூவரும் பிடிபட்டதை அடுத்து, விசாரணையில் உண்மை தெரியவந்தது. மூவரையும் அலிபுரில் யமுனை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று விசாரித்தோம். சோனு குமாரின் உடலை புதைத்த இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர். அங்கு தோண்டியபோது, எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவர்கள் வைத்திருந்த மொபைல் போனின், ஐ.எம்.இ.ஐ., நம்பரை வைத்து விசாரித்தபோது, இறந்தது சோனு குமார் என்பது தெரியவந்தது. அவரது வீட்டில் விசாரித்தபோது, மூன்று மாதங்களாக அவரை காணவில்லை என தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.