மிளகு, காபி கொட்டை திருட்டு; பலே கில்லாடிகள் மூவர் கைது
மிளகு, காபி கொட்டை திருட்டு; பலே கில்லாடிகள் மூவர் கைது
ADDED : ஏப் 21, 2025 08:43 PM

பாலக்காடு; மளிகை கடையில் இருந்து, 120 கிலோ மிளகு மற்றும் 250 கிலோ காபி கொட்டை திருடிய வழக்கில், மூவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி கள்ளமலை பகுதியை சேர்ந்தவர் டின்டோ ஜோய். கல்கண்டி பகுதியில் மளிகை கடை நடத்துகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் 11ம் தேதி இரவு, இவரின் மளிகை கடையில் இருந்து, 120 கிலோ மிளகு மற்றும் 250 கிலோ காபி கொட்டை திருட்டு போனது.
இது குறித்து, டின்டோ ஜோய், அகளி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் அனீஷ் தலைமையில் இரு தனிப்படை அமைத்து, சி.சி.டி.வி., காட்சிகளின் அடிபடையில் விசாரணை நடத்தினர். அதில், மலப்புரம் மாவட்டம் காடாம்புழை பகுதியை சேர்ந்த ரபீக், 44, பெரிந்தல்மண்ணை அங்காடிப்புரம் பகுதியை சேர்ந்த முகமதாலி, 49, வெட்டத்தூர் வேலக்காடு பகுதியை சேர்ந்த ரத்னகுமார், 47, ஆகியோர் மளிகை கடையில் திருடியது தெரிந்தது. மேலும், இவர்கள் கர்நாடக மாநிலம் கூர்கில் இருப்பதும் தெரிந்தது. அங்கு சென்ற போலீசார் நேற்று அவர்களை கைது செய்தனர்.
டி.எஸ்.பி., அசோக் கூறியதாவது: கூர்க் பகுதியில் தங்கி கட்டுமான பணிகள் செய்து வந்த, மூவரையும் கைது செய்தோம். இவர்களிடம் நடத்திய விசாரணையில், திருடிய பொருட்கள் வயநாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.
திருட்டுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட ரபீக் மீது கேரளாவில், 23 திருட்டு வழக்குகள் உள்ளன. முகமதாலி மீது, 11 வழக்குகளும்; ரத்னகுமார் மீது நான்கு திருட்டு மற்றும் கஞ்சா கடத்திய வழக்குகள் உள்ளன.
இவ்வாறு, கூறினார்.