ADDED : மார் 08, 2024 11:15 PM

பெங்களூரு: ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறி, மூன்று பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டில் உள்ள பிரபல, 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில், இம்மாதம் 1ம் தேதி, திடீரென குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
உணவகத்துக்கு வந்த மர்ம நபர் வைத்து சென்ற பையில் இருந்த குண்டுகள் தான் வெடித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது. அந்நபர் பையை வைத்துவிட்டு வெளியே செல்லும் சிசிடிவி வீடியோவை முதலில் போலீசார் வெளியிட்டனர்.
* கண்டக்டர் உறுதி
இந்த வழக்கு விசாரணையை கையில் எடுத்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், 500க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் குண்டு வைத்து விட்டு, பெங்களூரில் இருந்து பி.எம்.டி.சி., பஸ்சில் பயணம் செய்துள்ள வீடியோவும்; துமகூரு வழியாக பல்லாரி சென்ற வீடியோவும் வெளியானது.
இதற்கிடையில், மர்ம நபரை பற்றி தகவலை கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மர்ம நபரின் போட்டோவை காண்பித்து விசாரித்தபோது, பஸ்சில் பயணம் செய்ததை கண்டக்டர் உறுதிப்படுத்தினார். 'விரைவில் அந்நபரை பிடித்து விடுவோம்' என என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறினர்.
சிசிடிவி வீடியோ ஆதாரத்தின்படி, பல்லாரியில் இரண்டு நாட்களாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதி மினாஜ் சுலைமான், 20, என்பவரை இரண்டு நாட்களுக்கு முன், தங்கள் கஸ்டடியில் எடுத்தனர்.
* பயங்கரவாத செயல்
அவரிடம் நடத்திய விசாரணையில், சிறையில் இருந்து கொண்டே பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டம் தீட்டியது உறுதி செய்யப்பட்டது. அவர் அளித்த தகவல்படி, சிறையில் அவருடன் இருந்த பல்லாரியின் சையத் சமீர், 19, மும்பையின் அனாஸ் இக்பால் ஷேக், 23, டில்லியின் சயான் ரகுமான் உசேன், 26, ஆகிய மூன்று பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த நான்கு பேருமே, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதாக, 2023 டிசம்பர் 18ல், பல்லாரியில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
* வெடிபொருள்
விசாரணையில், 2023 அக்டோபரில், பல்லாரியில் உள்ள ஒரு விவசாய ரசாயன பொருட்கள் விற்கும் கடையில், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் அமோனியம் நைட்ரேட் ஒரு கிலோ வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனால், கூடுதல் விசாரணைக்காக, என்.ஐ.ஏ., அதிகாரிகள், நான்கு பேரையும் பல்லாரிக்கு அழைத்து சென்றுள்ளனர். விரைவில் குண்டு வைத்த மர்ம நபர் சிக்கி விடுவார் என்ற நம்பிக்கை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
---------
பாக்ஸ்....
--------
உணவகம் இன்று திறப்பு
குண்டு வெடித்த ராமேஸ்வரம் கபே உணவகத்தை நாளை மீண்டும் திறக்க ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்தன. உணவகத்தை சுத்தப்படுத்தி, நேற்று சிறப்பு ஹோமம், பூஜை செய்யப்பட்டது. தேசிய கீதம் இசைத்து, ஊழியர்கள் அனைவரும் நாட்டுப்பற்றுடன் இருப்போம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
* இன்று திறப்பு
இது குறித்து, உணவகத்தின் உரிமையாளர்கள் ராகவேந்திர ராவ் - திவ்யா தம்பதி கூறியதாவது:
குண்டு வெடிப்பு சம்பவத்தால், எங்களின் மன தைரியத்தை குறைக்க முடியாது. இந்திய கலாசாரத்தை, உணவு மூலம் உலகிற்கு பரப்புவோம்.
உணவகத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை, பாதுகாப்புக்கு நியமித்துள்ளோம். எங்களின் அனைத்து உணவகங்களில் பணிபுரியும் 1,500 ஊழியர்களுக்கும், பாதுகாப்பு குறித்து விளக்கியுள்ளோம்.
இங்கு நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் ஒருவர் தவிர, மற்றவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, மும்பை, புனே, சிங்கபூர், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளிலும் ராமேஸ்வரம் கபே உணவகம் திறக்கப்படும்.
இன்று காலை 6:00 மணி முதல், வழக்கம் போல் உணவகம் திறக்கப்படும். நாங்கள் அப்துல் கலாமை பின்பற்றுபவர்கள். சாமானியர்களாகவே இருப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***

