'நீட்' தேர்வு வினாத்தாள் மோசடி: ராஜஸ்தானில் மூன்று பேர் கைது
'நீட்' தேர்வு வினாத்தாள் மோசடி: ராஜஸ்தானில் மூன்று பேர் கைது
ADDED : மே 05, 2025 12:38 AM

ஜெய்ப்பூர்: நாடு முழுதும், 'நீட்' நுழைவுத் தேர்வு நேற்று நடந்த நிலையில், ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் தருவதாக கூறி, 40 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மூவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
நாடு முழுதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுதும் நேற்று நடந்தது.
கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்த நிலையில், இந்தாண்டு அதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்திருந்தது.
ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கான வினாத்தாளை 40 லட்சம் ரூபாய்க்கு தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு எழுதும் மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட மூன்று பேர் அடங்கிய குழு, தேர்வுக்கான வினாத்தாளை தருவதாக கூறி, அவர்களை குருகிராமிற்கு வர சொல்லியது.
இதை நம்பி சென்றவர்களிடம், அவர்கள் பணத்தை கேட்ட போது, வினாத்தாளை காண்பித்தால் பணம் தருவதாக மாணவர் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கு அவர்கள் மூவரும் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, சந்தேகமடைந்த மாணவரின் குடும்பத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து மோசடியில் ஈடுபட்ட பல்லான், 27, முகேஷ் மீனா, 40, ஹர்தாஸ், 38, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, மருத்துவ கல்லுாரிகளில் இடம் வாங்கி தருவதற்கு லஞ்சம் பெற்ற நான்கு பேரை ஒடிஷா போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக எழுந்த புகாரை விசாரித்த போலீசார், ஒடிஷாவைச் சேர்ந்த இருவரையும், ஜார்க்கண்ட், பீஹாரைச் சேர்ந்த தலா ஒருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
உள்ளூர் நபர்களின் உதவியுடன் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள், அவர்களின் ஆதார் அட்டை போன்றவற்றை பெறும் இந்த கும்பல், போலியாக ஹால் டிக்கெட்டை தயாரித்து, தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ய முயன்றதும் தடுக்கப்பட்டது.