ADDED : ஜூலை 08, 2025 08:44 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, உணவகத்துக்கு வந்த குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை தாக்கிய வழக்கில், ராணுவ வீரர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் நகரில் உள்ள உணவகத்தில், நேற்று முன்தினம் இரவு சுனங்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் நாசர், அவரது மனைவி, குழந்தைகளுடன் சாப்பிட சென்றுள்ளனர்.
அங்கு, குடிபோதையில் வந்த மாயன்னுார் பகுதியை சேர்ந்த ஹரிநாராயணன், 33, ராணுவ வீரரான மணிகண்டன், 36, ராஜேஷ், 41, ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, அப்துல் நாசர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை தாக்கினர். தகவல் அறிந்து வந்த, ஒற்றைப்பாலம் போலீஸ் ஸ்டேஷன் கூடுதல் எஸ்.ஐ., கிளாடின் பிரான்ஸ் என்பவரையும் தாக்கினர். இதையடுத்து, ஒற்றைப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில், தகராறில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.