'ஹனி டிராப்' செய்து ரூ.2.25 கோடி பறித்த பெண் உட்பட மூவர் கைது
'ஹனி டிராப்' செய்து ரூ.2.25 கோடி பறித்த பெண் உட்பட மூவர் கைது
ADDED : நவ 23, 2024 06:41 AM
ஆர்.டி.நகர்: 'ஹனிடிராப்' செய்து, 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறித்த, பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரின் ஆர்.டி.நகரில் வசிக்கும் 46 வயதான நபர், 2018ல் இங்குள்ள ஜிம்முக்கு சென்றிருந்தார். இவருக்கு ஜிம் உரிமையாளர் அஜீம் உத்தீன், 41, என்பவரின் சகோதரி தபசும் பேகம், 38, அறிமுகம் ஆனார்.
ஒரு முறை பேசிய தபசும் பேகம், 'நான் தனியாக வீட்டுக்கு நடந்து செல்வேன். உங்கள் மொபைல் போன் எண்ணை தெரிவித்தால், உங்களோடு பேசியபடியே செல்வேன். பாதுகாப்பாக இருக்கும்' என கூறினார். அந்நபரும் மொபைல் போன் எண்ணை கொடுத்தார்.
நாளடைவில் இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களை கூறி, அந்நபரிடம் தபசும் பேகம் கொஞ்சம், கொஞ்சமாக 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வாங்கினார்.
அதன்பின், தபசும் ஜிம்முக்கு வருவதை நிறுத்தினார். அந்நபர் பணத்தை திருப்பிக் கேட்டார்.
ஆனால் தபசும் பேகம், அந்நபருடன் தான் நெருக்கமாக இருந்த படங்களை காண்பித்து, சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். தன் சகோதரர் அஜீம் உத்தீன், இவரது கூட்டாளிகள் ஆனந்த், அபிஷேக்குடன் சேர்ந்து, மேலும் பணம் கேட்டு மிரட்டினார்.
ஏற்கனவே மிரட்டலுக்கு பயந்து, பலரிடம் கடன் வாங்கி 2.25 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கொடுத்திருந்த நபர், தபசும் பேகம் மற்றும் அவரது கூட்டாளிகளின் மிரட்டலால் மனம் நொந்து, சி.சி.பி., போலீசாரிடம் புகார் செய்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், தபசும் பேகம், அஜீம் உத்தீன், அபிஷேக், 33, ஆகியோரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.

