துவாரகா குட்டை நீரில் மூழ்கி மூன்று குழந்தைகள் பலி
துவாரகா குட்டை நீரில் மூழ்கி மூன்று குழந்தைகள் பலி
ADDED : மே 01, 2026 12:31 AM

புதுடில்லி ;துவாரகா நகரில் உள்ள குட்டை ஒன்றில் நிரம்பியிருந்த தண்ணீரில் மூழ்கி, மூன்று குழந்தைகள் நேற்று பலியாயின.
துவாரகா நகரின் செக்டார் 24 பகுதியில், கோல்ப் விளையாட்டு மைதானம் உள்ளது. அங்குள்ள குட்டை ஒன்றில் நேற்று, 8 - 10 வயதுடைய மூன்று குழந்தைகள், மூழ்கி இறந்தன.
இந்த தகவல் போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு நேற்று காலை, 7:00 மணிக்கு கிடைத்தது. தீயணைப்பு படையினருடன் அங்கு விரைந்த போலீசார், குட்டை தண்ணீரில் இறந்து மிதந்த மூன்று குழந்தைகளை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த குழந்தைகளின் பெற்றோர் யார்; எதற்காக அந்த குழந்தைகள் இறந்தன அல்லது யாரால் அந்த குழந்தைகள் மூழ்கடிக்கப்பட்டன என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
முதற்கட்ட தகவலின் படி, அந்த குட்டைக்குள் குளிக்க சென்ற போது, அந்த குழந்தைகள் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில், அந்த குழந்தைகளின் உடைகள், கரையில் இருந்தன. அதை வைத்து பார்க்கும் போது, குளிக்க இறங்கிய போது, அந்த குழந்தைகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
