தொழிலதிபரின் குழந்தைகளை கடத்திய மூன்று பேர் சுட்டு பிடிப்பு
தொழிலதிபரின் குழந்தைகளை கடத்திய மூன்று பேர் சுட்டு பிடிப்பு
ADDED : அக் 26, 2024 12:55 AM

பெலகாவி: 'ஆன்லைன் டிரேடிங்' நிறுவனத்தில், 7 கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், நிறுவன உரிமையாளரின் இரண்டு குழந்தைகளை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டினர். அவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து, குழந்தைகளை மீட்டனர்.
சுற்றி வளைப்பு
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம், அதானியில் வசிப்பவர் விஜய் தேசாய். இவருக்கு ஸ்ருஷ்டி, 4, என்ற மகளும், வியோம், 3, என்ற மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம், தாயிடம் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு, விஜய் தேசாயும், அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தனர். அப்போது, வீட்டிற்கு வந்த மூன்று மர்ம நபர்கள், 'குடிக்க தண்ணீர் வேண்டும்' என்று கேட்டுள்ளனர்.
விஜய் தேசாயின் தாய், வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்றார்.
அவர் வருவதற்குள் ஸ்ருஷ்டி, வியோமை மூன்று பேரும் கடத்திச் சென்றனர். விஜய் தேசாய் புகாரின்படி, அதானி போலீசார் விசாரித்தனர்.
நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள், விஜய் தேசாயை தொடர்பு கொண்டு, 'நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும்; இல்லாவிட்டால் உன் குழந்தைகளை கொன்று விடுவோம்' என்று மிரட்டினர்.
மர்ம நபர்கள் பேசிய நம்பரின் டவர் வாயிலாக, அவர்கள் அதானி அருகே கோஹள்ளி என்ற கிராமத்தில் பதுங்கியிருப்பது தெரிந்தது.
நேற்று காலை அக்கிராமத்திற்கு சென்ற போலீசார், மூன்று பேரையும் சுற்றி வளைத்தனர். அப்போது ஒருவர், கல்லை எடுத்து போலீசார் மீது வீசிவிட்டு தப்ப முயன்றார்.
இரட்டிப்பு லாபம்
இதனால், அவரது இடது காலில், எஸ்.ஐ., அபிஷேக் துப்பாக்கியால் சுட்டார். சுருண்டு விழுந்தவரை, போலீசார் கைது செய்தனர்.
மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் மூவரும், மஹாராஷ்டிராவின் கோலாப்பூரைச் சேர்ந்த சம்பாஜி ரவசாப் காம்ப்ளே, 30, பெலகாவி, சிக்கோடியின் ரவி கிரண், 35, பீஹாரின் ஷாருக் ஷேக், 30, என்பது தெரிந்தது. சம்பாஜி ரவசாப் காம்ப்ளே தான், துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டவர்.
கடத்தப்பட்ட குழந்தைகளின் தந்தை விஜய் தேசாய், 'ஆன்லைன் டிரேடிங்' நிறுவனம் நடத்தினார். தன் நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று, இவர்கள் மூன்று பேரையும் நம்ப வைத்தார்.
இதனால், மூன்று பேரும் 7 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். அவர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. பணத்தை திருப்பித் தரும்படி கேட்டும், விஜய் தேசாய் கொடுக்காததால், அவரது குழந்தைகளை கடத்தியது தெரிய வந்தது.
குழந்தைகளை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.