லாரி மீது மோதி பைக்கில் சென்ற மூவர் பலி * மீட்பு பணியில் ஈடுபட்டவரும் பலி
லாரி மீது மோதி பைக்கில் சென்ற மூவர் பலி * மீட்பு பணியில் ஈடுபட்டவரும் பலி
ADDED : மே 16, 2025 11:46 PM
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே லாரி மீது பைக் மோதியதில் மூன்று வாலிபர்கள் பலியாயினர். அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மற்றொரு வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலியானார்.
திருவனந்தபுரம் அருகே பெரும்பழுதூரைச் சேர்ந்த நண்பர்கள் அகில் 19, சாமுவேல் 20, அகில் 19. நேற்று முன்தினம் இரவு மூன்று பேரும் சாப்பிட ஒரே பைக்கில் பாலராமபுரத்திற்கு சென்றனர். ஓட்டலில் சாப்பிட்ட பின் நள்ளிரவு 11:45 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மடவூர்பாறை பகுதியில் ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி மீது பைக் மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அப்பகுதியினர் அவர்களை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மூவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.
இதற்கிடையில் விபத்து நடந்த போது அந்த வழியாக வந்த தான்னிவிளைபகுதியைச் சேர்ந்த மனோஜ் 26, மீட்பு பணியில் ஈடுபட்டார். பின் பைக்கில் அவர் வீட்டுக்கு புறப்பட்டார். மடவூர்பாறை -- தான்னிவிளை ரோட்டில் சென்ற போது பைக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் அவர் இறந்தார். பாலராமபுரம் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.