அடுக்குமாடி குடியிருப்பில் தீ :ஒடிஷாவில் மூவர் உயிரிழப்பு
அடுக்குமாடி குடியிருப்பில் தீ :ஒடிஷாவில் மூவர் உயிரிழப்பு
UPDATED : மே 06, 2026 07:49 PM
ADDED : மே 06, 2026 07:41 PM
புவனேஸ்வர்:ஒடிஷாவின் புவனேஸ்வரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உட்பட மூவர் பலியாகினர்.
ஓடிஷாவின் புவனேஸ்வரில் உள்ள லட்சுமி சாகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் தரைதளத்தில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. அப்போது அங்கிருந்த கட்டடத்தின் காவலாளி பிஸ்வஜித் பெஹேரா,70, மற்றும் மூதாட்டி சுலதா பெஹேரா,65, தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் தேஜஸ்வனி பெஹேரா என்ற சிறுமி பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி அங்கிருந்த 30 குடியிருப்புவாசிகளை வெளியேற்றி தீயை அணைத்தனர்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி தேஜஸ்வனி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
தீ விபத்து குறித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட துறை அதிகாரி ரமேஷ் சந்திர சேதி கூறுகையில், '' தீ விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனினும் தரைதளத்தில் கார் நிறுத்துமிடம் அருகே உள்ள மின் கட்டுப்பாடு பலகையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது குறித்து விசாரணை நடக்கிறது,' என்றார்.
