காருடன் நேருக்கு நேர் மோதியது லாரி மூவர் பலி; லாரி டிரைவர் தப்பியோட்டம்
காருடன் நேருக்கு நேர் மோதியது லாரி மூவர் பலி; லாரி டிரைவர் தப்பியோட்டம்
ADDED : மே 08, 2026 01:08 AM
குருகிராம்:குருகிராமில் நேற்று காலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் நில பதிவு அதிகாரி, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி உட்பட மூன்று பேர் இறந்தனர். இந்த மூவர் சென்ற கார் மீது எதிரே வந்த லாரி வேகமாக மோதியதில், மூன்று பேரும் படுகாயங்களுடன் கிடந்ததை பார்த்ததும், லாரி டிரைவர், லாரியை விட்டு தப்பியோடி விட்டார்.
டில்லி அருகே உள்ள குருகிராமில் உள்ளது புகார்பூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த நிலப்பதிவு அதிகாரி குல்தீப், 40; ஓய்வுபெற்ற ராணுவ வீரர் நவல்சிங், 68; சமய் சிங், 70, என்ற விவசாயி ஆகியோர், கார் ஒன்றில் ஜமல்பூர் சென்று, தங்கள் சொந்த கிராமமான புகார்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் விபத்து அவர்கள் சென்ற காரை, குல்தீப் ஓட்டிச் சென்றார். அந்த கார், நேற்று முன்தினம் நள்ளிரவில், ஹரியானாவின் மோகல்வாஸ் கிராமத்தின் அருகே, பச்கான் - ஜமல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, எதிரே, டையு மற்றும் டாமன் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி, பிலாஸ்பூரில் சரக்குகளை இறக்குவதற்காக சென்று கொண்டிருந்தது.
ஒரு வாகனம் மட்டுமே செல்லும் ஒரு வழிப்பாதையில் அந்த லாரி திடீரென கார் மீது வேகமாக மோதியது. இதில், காரில் சென்ற மூன்று பேரும், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அந்த வழியாக சென்றவர்கள், காரில் இடிபாடுகளில் சிக்கி கிடந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே மூன்று பேரும் இறந்து விட்டதாக கூறினர்.
பிரேத பரிசோதனை அதையடுத்து, இறந்த அந்த மூன்று பேர் உடலும், பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப் பட்டது.
கார் - லாரி விபத்தில், மூன்று பேர் சிக்கிக் கொண்டு, உயிருக்கு போராடி வருவதை அறிந்ததும், லாரி டிரைவர், தான் ஓட்டி வந்த லாரியை அப்படியே விட்டு ஓடிச் சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அதன் பிறகு தான், விபத்துக்கான காரணம் தெரிய வரும்.
