கேரள மாணவர் தற்கொலை வழக்கில் கடன் செயலி ஊழியர்கள் மூவர் கைது
கேரள மாணவர் தற்கொலை வழக்கில் கடன் செயலி ஊழியர்கள் மூவர் கைது
ADDED : ஏப் 19, 2026 12:14 AM

கண்ணுார்: கேரளாவில், பல் மரு த்துவ கல்லுாரி மாணவர் தற்கொலை வழக்கில் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள, 'ஆன்லைன்' கடன் செயலி ஊழியர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவின் கண்ணுார் மாவட்டம் அஞ்சரகண்டியில் உள்ள பல் மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.டி.எஸ்., படித்து வந்த நிதின் ராஜ், 19, என்ற மாணவர், கடந்த 10ம் தேதி கல்லுாரி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
நீக்கம் கல்லுாரியில் ஜாதி ரீதியாக ஆசிரியர்கள், மாணவர்கள் அவரை துன்புறுத்தியதால், நிதின் ராஜ் தற்கொலை செய்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இது, மாநிலம் முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நிதின் ராஜை ஜாதி ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பல் உடற்கூறியல் துறைத் தலைவர் டாக்டர் எம்.கே.ராம், கல்லுாரி நிர்வாகத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மற்றொரு உதவிப் பேராசிரியர் டாக்டர் சங்கீதா நம்பியார் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கண்ணுார் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்தது. இந்த குழு நடத்திய விசாரணையில், மாணவர் நிதின் ராஜ், ஜாதி ரீதியான துன்புறுத்தல் மட்டுமின்றி ஆன்லைன் கடன் செயலி மூலம் பெற்ற கடனை அடைக்காததால், அவரது ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால், மனமுடைந்து அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மிரட்டல் இதுதொடர்பாக நிதின் ராஜின் ஆசிரியருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளை வைத்து மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் கண்டறிந்தனர்.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் இயங்கி வரும், 'இன்ஸ்டாபே' என்ற ஆன்லைன் கடன் செயலி பணியாளர்கள் ரிஷிகேஷ் திவாரி, பிரசாந்த் கெவால் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய மூன்று பேரை கண்ணுார் சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
