ADDED : நவ 24, 2024 10:56 PM
விஜயநகரா: காணாமல் போன சிறுவனின் உடல், வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பெற்ற தாயே கொலை செய்து, நாடகமாடியது அம்பலமானது.
விஜயநகரா, ஹூவினஹடகலியின் இட்டகி கிராமத்தில் வசித்தவர் நீலப்பா, 40. இவரது மனைவி ஹனுமந்தம்மா, 36. தம்பதிக்கு விட்டல், 13, என்ற மகன் இருந்தார். நீலப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஓராண்டுக்கு முன் உயிரிழந்தார். தாயும், மகனும் வசித்து வந்தனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன், பள்ளியில் இருந்து திரும்பிய விட்டல், மொபைல் போனை எடுத்து கொண்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மகனை காணவில்லை என, ஹனுமந்தம்மா, இட்டகி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் தேடிய போது, பெனகல் கிராமத்தின் வனப்பகுதியில் சிறுவனின் உடல், நேற்று முன் தினம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அதன்பின் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அவர்களுக்கு, சிறுவனின் தாயின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் விசாரித்த போது, கொலை ரகசியம் அம்பலமானது. கணவர் இறந்த பின், கியாத்னா மல்லப்பா, 36, என்பவருடன், ஹனுமந்தம்மாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இவரது வீட்டில் உல்லாசமாக இருந்தனர். இதை மகன் விட்டல் நேரில் பார்த்தார். தாயை கண்டித்தார். அவ்வப்போது சண்டை போட்டு, புத்திமதி கூறினார்.
இதனால் கோபமடைந்த ஹனுமந்தம்மா, மகனை தொலைவில் அழைத்து சென்று கொலை செய்யும்படி, கள்ளக்காதலன் மல்லப்பாவை துாண்டினார்.
அதன்படி மல்லப்பா, தன் கூட்டாளி மஞ்சுநாத், 32, உடன் சேர்ந்து விட்டலை பெனகல் கிராமத்துக்கு அழைத்து சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து, வனப்பகுதியில் உடலை வீசியது விசாரணையில் தெரிந்தது.
மூவரையும் போலீசார் கைது செய்தனர்.