சிறுவனை சித்ரவதை செய்த மூன்று பேர் ம.பி.,யில் கைது
சிறுவனை சித்ரவதை செய்த மூன்று பேர் ம.பி.,யில் கைது
ADDED : நவ 05, 2024 12:08 AM
பந்துார்னா: மத்திய பிரதேசத்தில் சிறுவனை தலைகீழாக கட்டி வைத்து, தலையில் சூடுவைத்து சித்ரவதை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள பந்துார்னா மாவட்டத்தில், சிறுவன் ஒருவனை சிலர் சித்ரவதை செய்யும் வீடியோ வெளியானது.
அதில், சிறுவன் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு, அவன்தலையில் சிலர் சூடு வைக்கின்றனர்.
சூடு தாங்காமல் சிறுவன் அலறுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. அங்கிருக்கும் ஒரு நபர் மற்றொரு சிறுவனையும் கயிறுகளால் கட்டுவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அங்குள்ள மோஹ்கவுன் பகுதியில் வாட்ச் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக கூறி, அங்கிருந்த சிலர் சிறுவனை நேற்று முன்தினம் சித்ரவதை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

