ADDED : ஏப் 29, 2025 12:59 AM
இடா நகர்: அருணாச்சல பிரதேசத்தில் கட்டட தொழிலாளிகள் இருவரை கடத்திச் சென்ற, நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் மூன்று கிளர்ச்சியாளர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் லாங்டிங் மாவட்டத்தின் பங்க்சாவ் பகுதியில், கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதில், பணியாற்றி வந்த இரண்டு கட்டட தொழிலாளர்களை, தடை செய்யப்பட்ட நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் கிளர்ச்சியாளர்கள் கடந்த 25ம் தேதி கடத்திச் சென்றனர்.
தகவலறிந்த போலீசார், ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் உதவியுடன், தேடுதல் வேட்டையை துவக்கினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில், மூன்று கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடத்திச் செல்லப்பட்ட கட்டட தொழிலாளர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.