நாட்டில் நிலவும் மூன்று பிரச்னைகள்: சொல்கிறார் ராகுல்
நாட்டில் நிலவும் மூன்று பிரச்னைகள்: சொல்கிறார் ராகுல்
ADDED : மார் 14, 2024 01:02 PM

மும்பை: 'நாட்டில் மூன்று பிரச்னைகள் உள்ளன. பெரிய பிரச்னை வேலையின்மை, இரண்டாவது பணவீக்கம், மூன்றாவது விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது' என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ஒருவர் விவசாயிகளின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு, அவர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்காதவரை உதவ எண்ணம் வராது. விவசாயிகளுக்காக காங்கிரஸ் அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்கும் அரசு விரைவில் அமையும். விவசாயிகள் மீது பல்வேறு வகையான வரிகள் விதிக்கப் படுகின்றன.
விவசாயிகளின் வேளாண் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. பயிர்கள் சேதமடைந்தால் இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. ஜி.எஸ்.டி., சுமையும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கடனை கூட பா.ஜ., அரசு தள்ளுபடி செய்யவில்லை. சில கோடீஸ்வரர்களின் கோடிக்கணக்கான ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் மூன்று பிரச்னைகள் உள்ளன. பெரிய பிரச்னை வேலையின்மை, இரண்டாவது பணவீக்கம், மூன்றாவது விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஆனால் இந்த விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் பேசப்படுவதில்லை. நீருக்கடியில் பூஜை செய்வதில் பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார். ஆனால் நாட்டில் நிலவும் பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.

