மூணாறில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து தமிழக கல்லுாரி மாணவர்கள் 3 பேர் பலி
மூணாறில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து தமிழக கல்லுாரி மாணவர்கள் 3 பேர் பலி
ADDED : பிப் 20, 2025 02:23 AM

மூணாறு:மூணாறு அருகே மாட்டுபட்டி எக்கோ பாய்ன்ட் பகுதியில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து தமிழக கல்லுாரி மாணவர், இரண்டு மாணவிகள் பலியாயினர்.
தமிழகம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., கம்யூட்டர் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் 37 பேர், மூன்று ஆசிரியைகள், வேறொரு ஆசிரியையின் பத்து வயது மகன் நேற்று மூணாறுக்கு பஸ்சில் சுற்றுலா வந்தனர்.
மாட்டுபட்டி அணையை பார்த்து விட்டு எக்கோ பாய்ன்ட் பகுதிக்கு சென்ற போது எக்கோ பாய்ன்ட் அருகே பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் கவிழ்ந்தது. அதில் மாணவிகள் ஆதிகா 19, வேணிகா 19, சம்பவ இடத்தில் இறந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள், டிரைவர்கள் உதவியுடன் போலீசார் மீட்டு மூணாறில் உள்ள டாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மாணவர் சுதன் 19, கபின் 19, உள்பட சிலரை தேனி, மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியில் பூப்பாறை பகுதியில் சுதன் இறந்தார்.
எஞ்சிய அனைவரும் டாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிவேகம்: விபத்து ஏற்பட்ட இடம் அதிக வளைவு பகுதி என்பதால் அதிவேகம், டிரைவர் கவனக்குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
நேற்று விபத்தில் சிக்கிய பஸ் அதி வேகமாக சென்றால் விபத்து நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விபத்துக்கு பின் டிரைவர் தலைமறைவாகிவிட்டார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் காயமடைந்த இரு மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை தேனி கலெக்டர் ரஞ்சீத்சிங் சந்தித்து ஆறுதல் கூறினார்.