ADDED : மார் 05, 2024 07:02 AM
கதக்: டிராக்டருக்காக வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாததால் ஏற்பட்ட தகராறில், ஒரே குடும்பத்தில் மூன்று பேர், தற்கொலை செய்து கொண்டனர்.
கதக் லட்சுமேஸ்வர் கோனாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமப்பா. இவரது மனைவி சவக்கா, 55. இவரது மகன் மஞ்சுநாத், 23. விவசாயி. விவசாயம் செய்வதற்காக வங்கியில் கடன் வாங்கி, மஞ்சுநாத் டிராக்டர் வாங்கினார்.
ஆனால், வட்டியை சரியாக செலுத்தவில்லை. இதுதொடர்பாக தாய், மகன் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறிய மஞ்சுநாத், ஹாவேரி எலவகி கிராமத்திற்கு சென்றார். அவரை வீட்டிற்கு அழைத்து வர, சவக்காவும் சென்றார். அங்கு வைத்தும் தாய், மகன் இடையில் பிரச்னை ஏற்பட்டது.
இதனால் எலவகி கிராமம் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்திற்கு சென்ற மஞ்சுநாத், அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். மகனின் உடலை பார்த்து கதறி அழுத சவக்காவும், அந்த வழியாக வந்த இன்னொரு ரயில் முன் பாய்ந்து, உயிரை மாய்த்துக் கொண்டார்.
இது பற்றி அறிந்த சவக்காவின் சகோதரி ரேணவ்வா, 40, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹாவேரி ரயில்வே மற்றும் லட்சுமேஸ்வர் போலீசார் விசாரிக்கின்றனர்.

